ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல்
ஈரானின் அதிரடியான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மரண அடி உறுதி என இஸ்ரேல் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான பதற்றம்
இஸ்ரேலை நோக்கி நடத்தப்பட்ட குறைந்தது மூன்று கட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் அனுப்பிய அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இதுவரை இடைமறித்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், குறைந்தது 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் இராணுவத்தால் இடைமறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரானிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து,
நாடு முழுவதும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் மூடப்படும் என இஸ்ரேலிய அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தது. இதனிடையே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் பதுங்குமிடங்களுக்கு அருகிலேயே இருக்குமாறும்,
மேலும் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியுமாறும் இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் மீது சியோனிச இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் மீது மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
சட்டத்தை மீறும் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் செயல்படுவதாகவும், லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் நடந்துவரும் மோதலில் இஸ்ரேல் அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

தெற்கு லெபனான் மற்றும் தஹியா மீதான தாக்குதல்களை சியோனிச இராணுவம் நிறுத்த வேண்டும் என்று ஈரானின் இராணுவம் கூறியுள்ளது.
நெருங்கி வந்த நிலையில்
மேலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தினாலோ அல்லது ஈரானின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுத்தாலோ, இஸ்ரேல் இன்னும் கடுமையான மற்றும் வருந்தத்தக்க வகையிலான அடிகளைச் சந்திக்க நேரிடும்; அத்துடன் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களும் நடத்தப்படும் என்றும் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
இதனிடையே, ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுத்துள்ளதை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்த நடவடிக்கை, கண்டிப்பாக அவர்களுக்கு உதவப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வாரத்தில் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என்ற கட்டத்தில் நெருங்கி வந்த நிலையில், தற்போது இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உடனடியாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தாம் தொடர்புகொள்ள இருப்பதாகவும், அவரிடம் ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டாம் என கோர இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஞாயிற்றுக்கிழமையன்று பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மீது தாம் உடன்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |