போரை நிறுத்த விரும்பவில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு: வலுக்கும் கண்டனம்
காசா மீதான போரை நிறுத்த விரும்பவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ரஃபா மீதான தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவின் ரஃபா நகர் மீது பயங்கர வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் வழங்கிய தகவலின் படி, இஸ்ரேலின் வான் தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் ஏவிய இந்த ராக்கெட்கள் கைவிடப்பட்ட மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை தாக்கி இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இஸ்ரேலின் செயலுக்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போர் நிறுத்தத்திற்கு விருப்பம் இல்லை
இந்நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நெதன்யாகு, தற்போதைய தாக்குதல் "துக்ககரமான விபத்து” என தெரிவித்தார்.
இருப்பினும் இஸ்ரேல் தனது இலக்கை அடையும் வரை போரை நிறுத்த விரும்பவில்லை, மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டியது இன்றியமையாதது.
அதே சமயம் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க இஸ்ரேல் பாதுகாப்பு படை தங்களால் முடிந்த முயற்சிகளை சிறப்பாக செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ரஃபா நகரில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க ஐ.நா அவசர பொதுக்கூட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |