பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதும்... அம்பலமான இஸ்ரேலின் ரகசிய திட்டம்
காஸாவில் அமைந்துள்ள ஹமாஸ் படைகளின் எஞ்சியுள்ள சுரங்கப்பாதைகள் அனைத்தையும் மொத்தமாக அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்
ஹமாஸ் படைகள் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவித்ததும் அமெரிக்காவின் ஒப்புதலைப் பெற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றே தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழுவின் கீழ் இந்த நடவடிக்கை நடத்தப்படும் என்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். காட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதன் பின்னர் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் பெரும் சவால் என்பது காஸாவில் அமைக்கப்பட்டுள்ள ஹமாஸ் படைகளின் அனைத்து பதுங்கும் சுரங்கப்பாதைகளையும் அழிப்பதாகும் என்றார்.
இந்த நடவடிக்கையை முன்னெடுக்க இராணுவம் தயாராக வேண்டும் என தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் படைகளை நிராயுதபாணியாக்குவது மற்றும் அவர்களின் எஞ்சியுள்ள சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிப்பது என்பது அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர்நிறுத்த திட்டத்தின் அடுத்த கட்டம் என்றே காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கல்களையும் சிரமங்களையும்
முன்னதாக, வெள்ளிக்கிழமை அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்த திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஹமாஸ் படைகள் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக உயிருடன் இருக்கும் 20 பணயக்கைதிகள் உட்பட 48 பேர்கள் திங்களன்று விடுவிக்கப்பட உள்ளனர்.
இதற்கு ஈடாக தேசிய பாதுகாப்பு குற்றத்தில் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள 250 பாலஸ்தீனர்கள் உட்பட 2,000 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
இருப்பினும், ஆயுதங்களைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும், பாலஸ்தீன அரசாங்கம் அமையாமல் அதற்கான வாய்ப்பில்லை என்றும் ஹமாஸ் தரப்பில் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்கா முன்வைக்கும் இரண்டாம் கட்டமானது பல சிக்கல்களையும் சிரமங்களையும் கொண்டுள்ளது என்றே ஹமாஸ் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஹோசம் பத்ரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |