காசாவில் போர் இலக்குகளை அடைவது உறுதி! நினைவு விழாவில் நெதன்யாகு சபதம்
இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடல்களை திரும்ப பெறுவதில் உறுதியாக இருப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அனைத்து போர் இலக்குகளும் அடையப்படும்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து பிணைக் கைதிகள் விடுதலை மற்றும் உடல்கள் ஒப்படைப்பு நடைபெற்று வருகிறது.
ஆனால் சமீபத்தில் ஹமாஸ் அளித்த விளக்கத்தில், சில பிணைக் கைதிகள் உடல்கள் புதைந்திருக்கும் இடங்கள் தங்களுக்கு துல்லியமாக தெரியவில்லை என்றும், அதனால் மீதமுள்ள பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்று தெரிவித்து இருந்தனர்.
இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் காசா மக்களிடையே தாக்குதல் தொடர்பான அச்சத்தையும் மீண்டும் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை ஜெருசலேமில் மவுண்ட் ஹெர்சல் பகுதியில் நடந்த அரசு நினைவு விழாவில், ஹமாஸுடனான மோதலில் தான் அறிவித்த அனைத்து போர் இலக்குகளும் அடையப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிணைக் கைதிகள் உடல்கள் மீட்பு
மேலும் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களை மீட்பதில் உறுதியாக இருப்பதாகவும், இஸ்ரேலிய இராணுவத்தால் சிரியா நாட்டின் மவுண்ட் ஹெர்மோன் உச்சி முதல் தெஹ்ரான் வானம் வரையும் அடைய முடியும் என்று நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராக கைகளை தூக்கும் அனைவருக்கும் அதற்கான விலை உண்டு என்று அவர்களுக்கு தெரியும் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |