Pegasus விவகாரம்: என்.எஸ்.ஓ அலுவலகங்களில் இஸ்ரேல் அரசு சோதனை
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களை சோதனையிட்டதாக NSO செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
Pegasus Spyware எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த NSO எனும் இணையப் பாதுகாப்பு (Cyber Security) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
வங்கதேசம், மெக்சிகோ, சவூதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடமிருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.
பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது உலகம் முழுக்க உள்ள பல நாடுகளின் தலைவர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேலிய அரசு அதிகாரிகள் பெகாசஸ் ஸ்பைவேரை உருவாக்கிய என்எஸ்ஓ குழுமத்தின் அலுவலகங்களை சோதனை செய்துள்ளனர்.
இந்த சோதனையானது நேற்று நடைபெற்ற நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களை சோதனையிட்டதாக NSO செய்தித் தொடர்பாளர் இஸ்ரேலிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
NSO நிறுவனம் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்ந்து சோதனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
NSO நிறுவனம், இஸ்ரேலிய அரசு அதிகாரிகளுடன் முழு வெளிப்படைத் தன்மையுடன் ஒத்துழைக்கிறது என்றும் சமீபத்திய ஊடகத் தாக்குதல்களில் எங்களுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எங்கள் நிறுவனம் மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆய்வு அதனை நிரூபிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        