பணயக்கைதிகளின் நிலை அபாயத்தில்... இஸ்ரேலை எச்சரித்த ஹமாஸ் படைகள்
காஸா சிட்டியில் தங்க வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் இருவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என குறிப்பிட்டு, தாக்குதலை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை ஹமாஸ் படைகள் எச்சரித்துள்ளது.
தொடர்புகொள்ள முடியவில்லை
முற்றுகையிடப்பட்ட காஸா சிட்டியின் மையத்தின் பல சுற்றுப்புறங்களுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் தீவிரமாக ஊடுருவி வருகின்றன. மட்டுமின்றி, இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்கு மத்தியில், பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களும் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஹமாஸ் படைகளின் ஆயுதப்பிரிவான Qassam Brigades ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் Omri Miran மற்றும் Matan Angrest ஆகியோரை காவலில் வைத்திருந்த ஹமாஸ் வீரர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை,
Sabra மற்றும் Tal al-Hawa பகுதிகளில் இஸ்ரேல் இராணுவத்தின் மிக மோசமான, கொடூர தாக்குதலுக்கு பின்னர், 48 மணி நேரமாக அவர்களிடம் இருந்து தகவல் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இரண்டு கைதிகளின் உயிருக்கு உண்மையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, ஆக்கிரமிப்புப் படைகள் உடனடியாக சாலை 8 இன் தெற்கே பின்வாங்கி 24 மணி நேரம் வான்வழித் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
ஏற்கனவே, எஞ்சியுள்ள பணயக்கைதிகளின் புகைப்படங்களை வெளியிட்டு, இஸ்ரேலின் கொடூரத்திற்கு இவர்கள் பலியாவது உறுதி என குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில், காசாவில் 48 கைதிகள் இன்னும் இருப்பதாகவும், அவர்களில் 20 பேர் உயிருடன் இருக்கலாம் எனவும் இஸ்ரேல் கூறுகிறது.
ஆனால் இனப்படுகொலை என அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், போரை நிறுத்த நெதன்யாகு அரசாங்கம் மறுத்து வருகிறது. இஸ்ரேலில் போருக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தும் நெதன்யாகு தமது அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறார்.
கிடைக்கவில்லை
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம் அங்குள்ள மக்களின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்க மறுத்து வருகிறது. முன்னதாக ஹமாஸின் அரசியல் பிரிவு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
கத்தார் மற்றும் எகிப்திடமிருந்து புதிய போர்நிறுத்தம் அல்லது சமாதான முன்மொழிவுகள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறியது. செப்டம்பர் 9 அன்று தோஹாவில் உயர்மட்ட ஹமாஸ் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் முயன்றதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டிருப்பதை ஹமாஸ் படைகள் உறுதிப்படுத்தியது.
இதனிடையே, ஹமாஸ் படைகளை ஒழிப்பதற்கு முன்பு போரை முடிவுக்குக் கொண்டுவரும் வேறு எந்த ஒப்பந்தத்தையும், ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைக்கும் 21 அம்சத் திட்டத்தையும் தாங்கள் எதிர்ப்பதாக தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |