எந்த ஒப்பந்தங்களும் கட்டுப்படுத்தாது... ஹமாஸ் படைகளுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
ஹமாஸ் படைகள் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்களை நடத்தினால், காஸாவில் உள்ள இராணுவம் உக்கிரமான பதிலடி கொடுக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
மிகவும் கடுமையாகிவிடும்
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு மீறலுக்கும், ஒவ்வொரு துப்பாக்கிச் சூட்டுக்கும் ஹமாஸ் படைகள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமைச்சர் காட்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
என்ன சொல்ல வருகிறோம் என்பது புரியவில்லை என்றால், எங்களின் எதிர்வினை மிகவும் கடுமையாகிவிடும் என்றும் காட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால், எந்த ஒப்பந்தங்களும் தங்களை கட்டுப்படுத்தாது என குறிப்பிட்டுள்ள காட்ஸ்,
முழு வீச்சுடன் பதிலடி தருமாறு பிரதமர் நெதன்யாகுவிற்கும் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அக்டோபர் தொடக்கத்தில் ஹமாஸுடனான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேல் இதுவரை 47 முறை ஒப்பந்தத்தை மீறியதாக காஸா ஊடக அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.
இராணுவம் தயார்
அத்துடன் 38 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதுடன் 143 பேர்கள் காயங்கலுடனும் தப்பியுள்ளனர். ஏற்கனவே, காஸாவில் தங்களின் பணி முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றும், தேவை ஏற்படும் என்றால் தீவிரமாக களமிறங்க இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிரட்டல் விடுத்திருந்தார்.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததுடன், ஹமாஸ் படைகளிடம் எஞ்சியிருந்த 20 பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும், காஸா மக்களுக்கான உணவு விநியோகத்தை அனுமதிக்க நெதன்யாகு காலதாமதப்படுத்தி வந்தார். ராஃபா கடவையை திங்கட்கிழமை வரையில் திறக்க வாய்ப்பில்லை என்று கூறி வந்த நெதன்யாகு, தற்போது ராஃபா பகுதியிலேயே குண்டு வீச்சு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |