பணயக்கைதிகள் இருக்குமிடத்தை குறிவைத்த இஸ்ரேல்: இரவோடு இரவாக கொல்லப்பட்ட 77 பேர்கள்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தும், இஸ்ரேல் இரவோடு இரவாக நடத்திய தாக்குதலில் 77 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
இரவோடு இரவாக
இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது நெதன்யாகு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவை அமர்வை முன்னெடுக்க இஸ்ரேல் தாமதப்படுத்தி வருவதுடன், ஹமாஸ் படைகளே தாமதத்திற்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் இரவோடு இரவாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 77 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைகளின் மூத்த அதிகாரி இஸ்ஸாத் எல்-ரெஷிக் கூறுகையில்,
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தங்கள் குழு உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருதரப்பும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், ஜனவரி 19ம் திகதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வருகிறது.
இதனால் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்துவந்த 15 மாதகால கொலைவெறித் தாக்குதல் முடிவுக்கு வருகிறது என்றே கூறப்பட்டது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ஜோ பைடனின் பிரதிநிதி Brett McGurk மற்றும் ஜனவரி 20ம் திகதி பொறுப்புக்குவர இருக்கும் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் பிரதிநிதி Steve Witkoff ஆகியோருடன் எகிப்து மற்றும் கத்தார் அதிகாரிகள் தரப்பும் கலந்துகொண்டனர்.
இதில் முதற்கட்டமாக ஜனவரி 19 முதல் 6 வாரகாலம் போர் நிறுத்தம் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்றும், இந்த 6 வாரகாலத்தில் பணயக்கைதிகள் 33 பேர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் பதிலுக்கு பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் சிறையில் இருந்தும் விடுவிக்கப்படவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அத்துடன், காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கவும், காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மொத்தமாக வெளியேறவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வது என்றால், நாட்டின் பாதுகாப்பு அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அது வரையில் இந்த ஒப்பந்தமானது உத்தியோகப்பூர்வமாக இருக்காது.
உறுதி செய்யப்பட வேண்டும்
மட்டுமின்றி, வாக்கெடுப்பில் அது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த நிலையிலேயே, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமைச்சரவை கூட்டத்தை தாமதப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியானது.
மட்டுமின்றி, ஹமாஸ் படைகள் கடைசி நிமிடத்தில் கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்தங்களில் இருந்து பின்வாங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, நெதன்யாகு அரசாங்கத்தில் உள்ள கடும்போக்காளர்கள் இந்த ஒப்பந்தத்தை நிறுத்த இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், இருப்பினும் பெரும்பாலான அமைச்சர்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
காஸா மற்றும் இஸ்ரேலில் மக்கள் இந்த ஒப்பந்தத்தை கொண்டாடிய அதே வேளையில், இஸ்ரேலிய இராணுவம் காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தியதாக சிவில் அவசர சேவை மற்றும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காஸாவில் குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 188 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்ததன் பின்னர் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சிவில் அவசர சேவை தெரிவித்துள்ளது.
மேலும், காஸாவில் பெண் பணயக்கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதியை இலக்கு வைத்தே இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அத்துடன், பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டே போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்தி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |