இஸ்ரேல் - காஸா போரை நிறுத்துவது கடினம்... ஜோ பைடன் கைவிரிப்பு
வடக்கு காஸாவில் அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் முன்னெடுத்த வான் தாக்குதலில் பெண்கள் உட்பட டசின் கணக்கானோர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
முகாம்கள் மீது வான் தாக்குதல்
அகதிகள் முகாம் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. பாதுகாப்பான பகுதி என காஸா மக்களை ஜபாலியா பகுதிக்கு இடம்பெயர வைத்த இஸ்ரேல் ராணுவம், தற்போது அங்குள்ள முகாம்கள் மீது வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா படைகளுக்கும் இஸ்ரேலுக்குமான போர் நிறுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் காஸா போரை நிறுத்துவது கடினம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கைவிரித்துள்ளார்.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ள நிலையில், போர் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை வெளியான நிலையில், ஜோ பைடனின் கருத்து விவாதமாகியுள்ளது.
ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கு புறப்பட்ட பைடன், அங்கு ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய தலைவர்களை சந்திக்கவிருக்கும் நிலையில், காஸா போர் குறித்த தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹமாஸ் உயிர்ப்புடன்
இதனிடையே, ஈரானின் உயர் தலைவர் Ayatollah Ali Khamenei தெரிவிக்கையில், சின்வார் கொல்லப்பட்டதால், ஹமாஸ் படைகளை ஒழித்துவிடலாம் என பகல் கனவு காண வேண்டாம். இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றார். ஹமாஸ் உயிர்ப்புடன் இருக்கிறது, இன்னும் உயிர்ப்புடன் நீடிக்கும் என்றார்.
ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் 21 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 85 பேர்கள் காயங்களுடன் தாப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இறப்பு எண்ணிக்கை 50ஐ எட்டும் என்றே அஞ்சப்படுகிறது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜபாலியா முகாமில் மொத்தம் 400,000 மக்கள் சிக்கியுள்ளனர். உணவு மற்றும் குடிநீர் கையிருப்பு இன்னும் 2 வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
ஆனால் உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளுடன் 30 லொறிகளை முகாம் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அனுப்பியதாக இஸ்ரேல் தெரிவிக்க, இன்னும் தங்கள் பகுதிக்கு அந்த லொறிகள் வந்து சேரவில்லை என முகாமில் தங்கியிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |