ஹமாஸ் பிடியில் அனுபவித்த கொடூரம்... இஸ்ரேல் பணயக்கதிகள் வெளியிட்ட தகவல்கள்
இரண்டு வருட சிறைவாசத்திற்குப் பிறகு காஸாவில் இருந்து விடுவிக்கப்பட்ட கடைசி இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் கொடூரமான சூழ்நிலைகளைச் சந்தித்ததாகக் கூறியுள்ளனர்.
பட்டினிக்கு உட்படுத்தி
சிலர் கூண்டுகளில் அடைக்கப்பட்டதாகவும், குழிகள் அல்லது நிலத்தடி சுரங்கங்களில் சிறை வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். அமெரிக்காவால் இஸ்ரேலுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, உயிருடன் எஞ்சிய 20 பணயக்கைதிகளை கடந்த வாரம் ஹமாஸ் படைகள் விடுவித்தது.
அதில் ஒருவர் Omri Miran. இவரது சகோதரர் இஸ்ரேல் நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தொடக்கத்தில் ஒரு கூண்டுக்குள் ஐந்து கைதிகளை ஹமாஸ் சிறை வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, உணவு தட்டுப்பாடு இருப்பதை உலக நாடுகள் அறிந்துகொள்ளும் பொருட்டு, பணயக்கைதிகளை பட்டினிக்கு உட்படுத்தியதாகவும் கூறுகின்றனர். ஆனால், உணவு விநியோகத்தை மொத்தமாக முடக்கிய இஸ்ரேல் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை ஐ.நா அதிகாரிகள் பின்னர் அம்பலப்படுத்தியிருந்தனர்.
பல மாதங்கள் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டு, காஸா மக்களை பட்டினியால் சாகும் நிலைக்கு பெஞ்சமின் நெதன்யாகு நிர்வாகம் தள்ளியது. பணயக்கைதிகள் அனைவரும் ஹமாஸ் படைகளைப் போலவே அதே நிலைமைகளில் வாழ்ந்ததாகவும்,
காஸாவில் கிடைப்பதற்கு ஏற்ப மருத்துவ மற்றும் உளவியல் கவனிப்பும் உணவும் பெற்றதாகவும் ஹமாஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் சிறைகளில் வாடும் பாலஸ்தீன மக்கள் போல் அல்லாமல், எந்த கைதியும் அவமானங்களுக்கோ அல்லது சித்திரவதைக்கோ ஆளாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூண்டில் சிறை
இன்னொரு இஸ்ரேல் பணயக்கைதியின் தாயார் தெரிவிக்கையில், ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் அவருடைய மகன் கசையடியால் துன்புறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட விரும்பாத பொருட்களால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்னொருவர் ஹமாஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்று, அந்த முயற்சி தோல்வியடைந்து, ஹமாஸ் படைகளிடம் மீண்டும் சிக்கி கைவிலங்கிடப்பட்டு கூண்டில் சிறை வைக்கப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 தாக்குதலின் போது ஹமாஸ் படைகள் 251 பேர்களை பணயக்கைதிகளாக காஸாவிற்கு கடத்தி வந்தனர். இவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் இரண்டு போர் நிறுத்தங்களின் போது விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |