கிரேட்டா துன்பெர்க்கை கைது செய்த இஸ்ரேலிய இராணுவம்: ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்
காஸா மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் படகுகளில் பயணப்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்களில் ஒருவரான கிரேட்டா துன்பெர்க்கை இஸ்ரேல் இராணுவம் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுப்பாட்டுக்குள்
காஸா மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் சென்ற Global Sumud Flotilla உறுப்பினர்கள் தெரிவிக்கையில், இஸ்ரேல் இராணுவ வீரர்கள் தங்கள் படகுகளில் அத்துமீறி குதித்து அவர்களின் பயணத்தை சட்டவிரோதமாக இடைமறித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஹமாஸ் ஆதரவு படகுகள் பலவற்றை பத்திரமாக தடுத்து நிறுத்தியதாகவும், அதிலிருந்த பயணிகளை இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சரகம் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஆனால், முற்றுகையிடப்பட்ட Global Sumud Flotilla படகுகளுக்கு ஹமாஸ் படைகளுடன் தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரங்களையும் இஸ்ரேளின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிடவில்லை.
மேலும், ஸ்வீடன் சமூக ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் படகில் இருந்து வெளியேற்றப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்றையும் இஸ்ரேல் அமைச்சகம் பகிர்ந்து கொண்டது.
மட்டுமின்றி, கிரெட்டாவும் அவரது நண்பர்களும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர் என்றும் பதிவிட்டுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன் தெரிவிக்கையில்,
யூத விடுமுறையான யோம் கிப்பூர் நாளை முடிவடைந்தவுடன், Flotilla-வில் பயணப்பட்ட ஆர்வலர்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என்றார். போர் மண்டலத்தில் இதுபோன்ற நாடகங்களுக்கு இஸ்ரேல் அனுமதி அளிக்காது என்றும்,
முற்றுகையை உடைக்க
இஸ்ரேலிய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் யோம் கிப்பூருக்குப் பிறகு உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். காஸா மக்களுக்கான உதவிப் பொருட்களுடன் பயணப்பட்ட 45 படகுகளில் 500க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் உள்ளனர்.
17 ஆண்டுகளாக நீடிக்கும் இஸ்ரேலின் முற்றுகையை உடைக்க முயற்சிக்கும் இந்த அணிவகுப்பு ஒரு மாதத்திற்கும் மேலாக மத்தியதரைக் கடல் வழியாக பயணித்து வந்துள்ளது.
இந்த நிலையில், காஸா மக்களுக்கு உதவிகளை வழங்க முயற்சிக்கும் தங்கள் மீது இஸ்ரேலிய கடற்படை கடும்போக்கு நடவடிக்கையைப் பயன்படுத்தியதாக Global Sumud Flotilla ஒருங்கிணைப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த முறையும் கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட ஆர்வலர்கள் காஸாவை நெருங்க முயன்றபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது மீண்டும் இஸ்ரேலின் கைது நடவடிக்கைகளுக்கு ஆர்வலர்கள் இலக்காகியுள்ளனர். இந்த நிலையில் Flotilla உறுப்பினர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |