பல நாள் பட்டினியுடன் தூக்கத்தில் இருந்த காஸா குடும்பம் மீது இஸ்ரேல் தாக்குதல்
காஸாவில் பல நாள் பசியுடன் தூங்கச் சென்ற அல்-ஷேர் குடும்பத்தினர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் சிக்கி தூக்கத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
காஸா முழுவதும் 120 இலக்கு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சிறார்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்புக்குள்ளான அவர்களின் வீட்டிற்கு வெளியே அவர்களின் உடல்கள் வெள்ளை போர்வைகளில் பொதியப்பட்டுக் கிடந்தன, அவர்களின் பெயர்கள் பேனாவால் எழுதப்பட்டிருந்தன.
தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஆனால் கடந்த நாளில் காஸா முழுவதும் 120 இலக்குகளை தங்கள் விமானப்படை தாக்கியதாகக் கூறியது.
தாக்குதலின் போது உணவு தேடி வெளியே சென்றிருந்ததால் மட்டுமே சில வீட்டார் காப்பாற்றப்பட்டனர். பட்டினியால் ஒரே இரவில் மேலும் பத்து பாலஸ்தீனியர்கள் இறந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, இதனால் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 21 குழந்தைகள் அடங்குவர் என்று உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு எந்த உணவையும் வழங்க முடியவில்லை என்றும், உணவு விநியோகங்களை மீண்டும் தொடங்குவது இன்னும் தேவையானதை விட மிகக் குறைவாகவே உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியது.
பட்டினியால் மடியும் நெருக்கடி
காஸாவிற்கு வெளியே டன் கணக்கில் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருத்துவப் பொருட்கள் இஸ்ரேல் நிர்வாகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், பாலஸ்தீன மக்கள் பட்டினியால் மடியும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து காஸாவுக்கான அனைத்து விநியோகங்களையும் துண்டித்த இஸ்ரேல், மே மாதத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. போரின் போது காஸாவிற்குள் போதுமான உணவை அனுமதித்ததாகவும், காசாவின் 2.2 மில்லியன் மக்களின் துன்பங்களுக்கு காரண்அம் ஹமாஸ் படைகள் மட்டுமே என்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், காஸா மக்களுக்கான 700 லொறி உதவிப்பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிக்காமல் ஐக்கிய நாடுகள் மன்றம் மெத்தனமாக செயல்பட்டதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் உணவிற்காக திரண்ட அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட சுமார் 300 இஸ்ரேலியர்களுக்காக இதுவரை கிட்டத்தட்ட 60,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஹமாஸ் படைகளின் மொத்த பலமும் அழிக்கப்பட்டுள்ளது. காஸாவின் பெரும்பாலான பிரதேசங்களை மொத்தமாக உருக்குலைத்துள்ளதுடன் கிட்டத்தட்ட முழு மக்களையும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற பல முறை கட்டாயப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாகவே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |