லெபனான் ஒரு பக்கம்... காஸா மறுபக்கம்: போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு சவால் விடும் இஸ்ரேல்
காஸா மற்றும் லெபனானில் போர் நிறுத்தம் நீடிக்கும் நிலையிலும், உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
ஹமாஸ் தீவிரவாதி
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், அல் ஜசீரா செய்தி நிறுவன ஒளிப்பதிவாளர், ஒரு குழந்தை உட்பட குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமையன்று மத்திய காஸாவில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட தங்களது செய்தியாளர் அகமது விஷாவை குறி வைத்து கொலை செய்த கொடூரத்தை வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அகமது விஷா உண்மையில் ஹமாஸ் தீவிரவாதி என்றே இஸ்ரேல் இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த அக்டோபரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேலிய இராணுவம் 1,007 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது என ஹமாஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமையன்று விஷாவின் படுகொலை, அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளின் புதிய மற்றும் அப்பட்டமான மீறல் என்றும், இது பத்திரிகையாளர்களைக் குறிவைத்து உண்மையின் குரலை ஒடுக்கும் ஒரு தொடர்ச்சியான, திட்டமிட்ட கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்றும் அல் ஜசீரா கூறியுள்ளது.
ஆனால், விஷா சமீப மாதங்களில் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிரான குறி பார்த்துச் சுடும் தாக்குதல் திட்டங்களை முன்னெடுத்திருந்தார் என, அதற்கான ஆதாரங்களை வழங்காமல் இஸ்ரேல் இராணுவம் பதிலளித்துள்ளது.
இஸ்ரேலும் பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் படைகளும் அக்டோபர் மாதம் முதல் போர் நிறுத்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
இதனிடையே, தெற்கு லெபனான் மீது சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். லெபனான், காஸா உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்திற்கு இந்த ஈரான் - அமெரிக்க இடைக்கால ஒப்பந்தம் அழைப்பு விடுக்கிறது.
ஆனால், போர் நிறுத்தம் உள்ளிட்ட எந்த ஒப்பந்தங்களும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றே இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
புதிய ஒப்பந்தத்திற்கு சவால்
மட்டுமின்றி, ஹிஸ்புல்லாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களை இஸ்ரேல் எதிர்கொள்வதை இப்படியான ஒப்பந்தங்கள் தடுக்கிறது என்று வாதிடும் இஸ்ரேலிய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களால் இந்த ஒப்பந்தங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்காவுடனான இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே லெபனானில் தொடரும் பகைமை, வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய ஒப்பந்தத்திற்கு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது.
மட்டுமின்றி, இஸ்ரேலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் முற்றிலுமாக நீக்கப்படும் வரை, தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.
லெபனானிலிருந்து வெளியேற இஸ்ரேல் உறுதியளிக்காவிட்டால் தங்கள் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என்று ஹிஸ்புல்லா அதிரடியாக அறிவித்துள்ளது. ஈரான் - அமெரிக்க ஒப்பந்தத்தில், இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |