இயேசு சிலையை தாக்கியது தொடர்பில் இஸ்ரேலிய வீரர்கள் கைது
லெபனானில் கோடரியால் இயேசு சிலையை தாக்கியது வழக்கில் இஸ்ரேலிய வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய வீரர்கள் கைது
லெபனானின் தெற்கு பகுதியில் சமூக ஊடகங்களில் இயேசு சிலையை ஒருவர் தாக்கும் புகைப்படம் பரவியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலை மீது தாக்கிய வீரரும், அதனைப் புகைப்படம் எடுத்த மற்றொரு வீரரும் 30 நாட்கள் இராணுவக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் தற்காப்பு படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
இதுகுறித்த விசாரணைக்குப் பிறகு, அவர்கள் இருவரும் போர் நடவடிக்கைப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
6 வீரர்கள் மீது தனியாக நடவடிக்கை
மேலும், இச்செயலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கத் தவறிய 6 வீரர்கள் மீது தனியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் IDF கூறியுள்ளது.

அத்துடன் அந்த சிலையை மீண்டும் அதன் இடத்தில் நிறுத்தி சீரமைக்க பணியாற்றி வருவதாகவும் IDF உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 'லெபனானிலும், உலகம் முழுவதிலும் உள்ள நம்பிக்கையாளர்களுக்கு இதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய எந்தவொரு மனவேதனைக்கும்' மன்னிப்பு கோரினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |