தமிழ்நாட்டிலிருந்து விண்வெளிக்கு ராக்கெட்களை ஏவ உள்ள இஸ்ரோ - எந்த பகுதியில் தெரியுமா?
2027 ஆம் ஆண்டில் குலசேகரபட்டினம் விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட்கள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன், அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி நிலையம், குலசேகரப்பட்டின விண்வெளி ஏவுதளம், சந்திரயான்-4 குறித்து பல்வேறு தகவல்களை வழங்கினார்.
ககன்யான் திட்டம்
இதில் பேசிய அவர், ககன்யான் திட்டம் என்பது நாம் தயாரிக்கும் ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி, அவர்களைப் பத்திரமாகத் திரும்பக் கொண்டு வரும் திட்டம் ஆகும்.
இந்த திட்டத்திற்கான ராக்கெட் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ராக்கெட் ஏவுதலின்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில், அவர்களை பத்திரமாக வெளியேற்றும் அமைப்பின் ”குரூப் எஸ்கேப் சிஸ்டம்" திட்டப்பணியும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதற்காக 8,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மனிதர்களுடன் ககன்யான் விண்கலம் 2027 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக மனிதர்கள் இல்லாத 3 பரிசோதனை ராக்கெட்டுகள் அனுப்பப்பட உள்ளன.
2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இந்த விண்வெளி நிலையம் மொத்தம் 5 தொகுதிகளாக உருவாக்கப்படும். முதல் தொகுதி அமைக்க 2028 ஆம் ஆண்டில் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பப்படும்.
குலசேகரப்பட்டின விண்வெளி ஏவுதளம்
2023 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய குலசேகரபட்டினம் விண்வெளி ஏவுதளத்தின் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

2027 ஆம் ஆண்டில் இங்கிருந்து ராக்கெட்கள் விண்ணுக்கு ஏவப்படும். ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக இது அமையும்.
சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது போல, சந்திரயான்-4 திட்டமானது நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து நிலவின் மாதிரிகளை சேகரித்து திரும்ப பூமிக்குக் கொண்டு வரும்" என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் 2,350 ஏக்கரில், விண்வெளி ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |