உணவுப்பொருட்கள் வாங்கவே கஷ்டமாக இருக்கிறது... பிரான்சில் தெருவில் இறங்கி பேரணி நடத்திய ஆயிரக்கணக்கானோர்
பிரான்ஸ் முழுவதும், விலைவாசியை எதிர்கொள்வதற்காக ஊதிய உயர்வு வேண்டும் என்பது முதலான கோரிகைகளுடன், ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி பேரணிகள் நடத்தினார்கள்.
பாரீஸில் வர்த்தக யூனியன் பணியாளர்கள் பேரணி
பிரான்ஸ் முழுவதும், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பிற பொதுத்துறைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் முதலான விடயங்களில் இறங்கியுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலும் ஆயிரக்கணக்கான வர்த்தக யூனியன் பணியாளர்கள் பேரணிகளில் இறங்கினார்கள்.
பிரான்ஸ் தேசிய மாணவர் யூனியன் உறுப்பினர்களும் பங்கேற்பு
வர்த்தக யூனியன் பணியாளர்களுடன் இணைந்து, பிரான்ஸ் தேசிய மாணவர் யூனியன் உறுப்பினர்களும் பேரணிகளில் பங்கேற்றார்கள்.
அப்போது பேசிய தேசிய மாணவர் யூனியன் தலைவரான Victor Mendez, பணியாளர்களைப் போலவே தனிப்பட்ட முறையில் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதைப் போல உணர்கிறோம், காரணம், நாங்களும் பணியாளர்கள்தான் என்கிறார்.
ஏனென்றால், பெரும்பாலான மாணவர்கள் படிக்கும்போதே வேலையும் செய்கிறார்கள். கல்லூரிக்கு சென்று வந்ததும் நாங்களும் வேலைக்குச் செல்கிறோம், எங்கள் குடும்பங்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றன என்பதை நாங்கள் பார்க்கிறோம், ஆகவே, நாங்களும்தான் கஷ்டப்படுகிறோம் என்கிறார் அவர்.
Copyright AP Photo/Thibault Camus
உலகின் ஆறாவது வலிமையான நாடு என அழைக்கப்படும் பிரான்சில், பெரும்பாலான குடும்பங்கள், முட்டை, மாமிசம் என உணவுப்பொருட்களை வாங்க கஷ்டப்படுகின்றன என்பது நம்பக்கூடிய விடயமா என்கிறார் அவர்.
ஆகவே, ஊதியத்தை உயர்த்துதல், பணக்காரர்களுக்கு வரி போட்டு பொது சேவைகளுக்கு நிதியுதவி செய்தல் என்பவைதான் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக இருக்கமுடியும் என நாங்கள் நம்புகிறோம், அதுதான் எங்கள் கோரிக்கையும் என்கிறார் Victor.
சுமார் 30,400 பேர் பிரான்ஸ் முழுவதிலும் பேரணிகளில் இறங்கியதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், 100,000க்கும் அதிகமானோர் தெருக்களில் பேரணிகளில் இறங்கியதாக தொழிலாளர் யூனியன்கள் தெரிவித்துள்ளன.