நாட்டிற்காகப் போரிட மறுக்கும் ஐரோப்பிய நாடொன்றின் மக்கள்
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு நேரடியாகப் போரில் ஈடுபடும் என்று இத்தாலியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் நம்புவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டு கூலிப்படை
ஆனால், போரிடும் வயதில் இருக்கும் 16 சதவீதம் பேர்கள் மட்டுமே ஆயுதம் ஏந்தத் தயாராக இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். CENSIS என்ற அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 19 சதவீதம் பேர்கள் வேறு வழியில் கட்டாயப்படுத்தலைத் தவிர்க்க முயற்சிப்பார்கள் என்றும்,
26 சதவீதம் பேர்கள் தங்களுக்கு பதிலாக போரில் கலந்துகொள்ள வெளிநாட்டு கூலிப்படையினரை இத்தாலி நிர்வாகம் வேலைக்கு அமர்த்த வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் இரண்டு போர்களுக்குப் பிறகு, இத்தாலி மற்ற நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து தேசிய பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளது.
அமைதியை உறுதி செய்வதற்கு இராணுவ நடவடிக்கை ஒரு நல்ல வழி என்று 26 சதவீதம் பேர்கள் மட்டுமே நம்புகிறார்கள், அதே நேரத்தில் 25 சதவீதம் பேர்கள் மட்டுமே அரசாங்க சலுகைகளைக் குறைத்தாலும் அதிகரித்த இராணுவ வரவு செலவுத் திட்டங்களை ஆதரிக்கின்றனர்.
ஒற்றை இராணுவம்
11 சதவீதம் மக்கள் மட்டுமே, இத்தாலி அணு ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் பாதுகாப்புச் செலவினங்கள் 46 சதவீதம் அதிகரித்த போதிலும், இத்தாலியில் தனிநபர் செலவு ஒப்பீட்டளவில் குறைவாகவே 586 டொலர்களாக உள்ளது.
இது கிரேக்கத்தில் 686 டொலர்களாகவும், அமெரிக்கா அல்லது நார்வே போன்ற நாடுகளில் 2,000 டொலர்களாகவும் உள்ளது. இத்தாலியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அனைத்து இத்தாலியர்களில் 49 சதவீதம் பேர்கள் நேட்டோவை வலுப்படுத்துவதை ஆதரிப்பதாகவும், 58 சதவீதம் பேர்கள் ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைப்பை, ஒற்றை இராணுவத்துடன் காண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |