இஸ்ரேல் அளித்த தகவல்... ஐரோப்பிய நாடொன்றில் நிதி திரட்டிய 9 பேர்கள் கைது
இத்தாலியில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் ஹமாஸ் படைகளுக்கு நிதி திரட்டியதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேரை கைது செய்துள்ளதாக இத்தாலிய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத அமைப்பு
இத்தாலியின் மாஃபியா தடுப்பு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவுகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையில் கைது நடந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் முதன்மை நேச நாடான இஸ்ரேலால், பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஹமாஸ் படைகளுக்கு ஆதரவானவர்கள் மற்றும் நிதியுதவி அளிப்பவர்கள் என கைதான 9 பேர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மனிதாபிமான நோக்கங்களுக்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் திரட்டப்பட்ட சுமார் 7 மில்லியன் யூரோக்களை ஹமாஸ் படைகளுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாலஸ்தீன ஆதரவு தொண்டு நிறுவனத்தின் அலுவலகங்களிலும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் இருந்து 1.08 மில்லியன் யூரோ ரொக்கப் பணத்தையும், ஹமாஸ் படைகளுக்கு ஆதரவான பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, டச்சு அதிகாரிகள் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான ஒத்துழைப்பின் மூலம் சந்தேகத்திற்கிடமான நிதி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இத்தாலிய விசாரணை தொடங்கியது.

இந்த நிலையில், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்று சொல்லப்படுபவை மூலம் ஹமாஸ் படைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதைக் கண்டறிந்த, மிகவும் சிக்கலான மற்றும் முக்கியமான ஒரு நடவடிக்கையை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஜோர்ஜியா மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.
வலிமையான நட்பு நாடாக
இதனிடையே, இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகள், நிறுவப்பட்ட மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகள் மூலம் இத்தாலிய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குத் தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கிப் பங்களித்தன என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களை ஆதரிக்கும் எவரையும், வெளிநாட்டில் கூட, பின்தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

மெலோனியின் வலதுசாரி அரசாங்கம் ஐரோப்பாவில் இஸ்ரேலின் வலிமையான நட்பு நாடாக உள்ளது. ஹமாஸ் படைகளுடனான காஸா போரில் இஸ்ரேலுக்கு அது அளிக்கும் ஆதரவு, இத்தாலியில் பெரிய மற்றும் தொடர்ச்சியான தெருவழிப் போராட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளது.
இதனிடையே, சனிக்கிழமை மிலனில் நடந்த பேரணியில் இத்தாலிய பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் கைதுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர் மற்றும் அடக்குமுறை மற்றும் குற்றமயமாக்கல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காவல்துறை நடவடிக்கையை கண்டித்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |