விளையாட்டு வினையானது... படுக்கையில் சடலமாக பிரித்தானியர்: உயிருக்கு போராடும் மனைவி
இத்தாலி நாட்டில் சுற்றுலாவுக்கு சென்ற பிரித்தானிய நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இத்தாலிய பொலிசார் தெரிவிக்கையில், 41 வயதான பிரித்தானியர் ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும், 43 வயதான அவரது மனைவி உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் மற்றும் சிராய்ப்புகளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
புளோரன்ஸ் நகரின் மத்தியில் அமைந்துள்ள அந்த ஹொட்டல் ஊழியர்களிடம் குறித்த 43 வயது பெண் ரத்த காயங்களுடன் உதவி கோரிய நிலையிலேயே, அவர்கள் சம்பவத்தின் தன்மை அறிந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று, குறித்த பெண்மணியை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மிக ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சையில் உள்ளார் எனவும், ஆனால் உயிருக்கு தற்போது அச்சுறுத்தல் இல்லை என்றே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிகின்றன. மான்செஸ்டரைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் அந்த தம்பதியினர் வெள்ளிக்கிழமை இரவு ஹொட்டலுக்கு வந்துள்ளதுடன் சனிக்கிழமை அதிகாலை உதவிக்கு அழைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பிரித்தானிய தம்பதிகள் இருவரும் ஆபத்தான தாம்பத்திய விளையாட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், அது தவறாக முடிந்துள்ளது எனவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் தாக்குதலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாகவும், ஆனால் அதில் மிகக் குறைவான சாத்தியமே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இருவரது உடம்பிலும் ஆழமான காயங்கள் காணப்பட்டுள்ளது எனவும், கூரான ஆயுதத்தால் உடல் முழுவதும் காயப்படுத்தப்பட்டுள்ளது எனவும், பெண்மணியின் உடலில் அதிக காயங்கள் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த பெண்ணிடம் விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், அதன் பின்னரே உண்மை தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.