பாகிஸ்தான் பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு - முன்னாள் இத்தாலி பிரதமர் கோரிக்கை
பாகிஸ்தான் நோபல் பரிசுக்கு தகுதியானது என முன்னாள் இத்தாலி பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் நிறுத்தம்
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

காலக்கெடு முடிவடைவதற்குள் ஈரான் ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் இரவில் ஒரு நாகரிகமே அழிந்து விடும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்தது உலக அளவில் பதற்றத்தை அதிகரித்தது.
கெடு முடிய 2 மணி நேரத்திற்கு முன்பாக ஈரானின் 10 அம்ச கோரிக்கைகளை ஏற்பதாக கூறிய ட்ரம்ப், 2 வார கால தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் இந்த போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், நாளை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு நோபல் பரிசு
இந்த நிலையில், இத்தாலி முன்னாள் பிரதமர் பாவ்லோ ஜென்டிலோனி, பாகிஸ்தான் அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானது என தெரிவித்துள்ளார்.
Forse merita il Nobel. Il Pakistan.
— Paolo Gentiloni (@PaoloGentiloni) April 8, 2026
இதே போல், போர் நிறுத்த முயற்சிகளுக்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என கராச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (KCCI) கோரிக்கை வைத்துள்ளது.
இந்த போர் நிறுத்தத்திற்கு ஈரானை சம்மதிக்க வைத்ததன் பின்னணியில் அதன் நட்பு நாடான சீனாவின் பங்கும் உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒப்பந்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் போர் நிறுத்தத்தில் இருந்து விலக நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
யுரேனியம் செறிவூட்டல், மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுதல் ஆகியவற்றை ஈரான் கோரிக்கையாக வைத்துள்ள நிலையில், தற்போது அதையெல்லாம் ஏற்க முடியாது என டிரம்ப் தெரிவித்திருப்பது போர் நிறுத்தம் 2 வாரத்திற்கு தொடருமா என்பதில் சந்தேகம் உள்ளது.
தான் பல நாடுகளுக்கு இடையேயான போர்களை நிறுத்தியதால் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர், மரியா கொரினா மச்சாடோ ட்ரம்ப்பை சந்தித்து, தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை வழங்கினார்.
மச்சாடோ அதை ட்ரம்ப்பிற்கு வழங்கினாலும், மரியா கொரினா மச்சாடோ தான் நோபல் பரிசு பெற்றவராக கருதப்படுவார். நோபல் பரிசை ஒருபோதும் மாற்ற முடியாது என நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |