உளவு பார்த்ததாக வெளியேற்றிய ஐரோப்பிய நாடு: பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரிக்கை
இத்தாலி அரசு உளவு பார்த்ததாக ரஷ்யத் தூதரக ஊழியர்கள் இருவரை வெளியேற்றியது.
ரகசியத் தகவல்கள்
இத்தாலியில் இந்த வாரத் தொடக்கத்தில், ரஷ்ய உளவாளி எனக் கருதப்படுபவரிடம் ரகசியத் தகவல்களை வழங்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய சந்தேக நபர் இத்தாலியின் Carabinieri காவல் படையின் முன்னாள் அதிகாரி என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் 5 பேரும் விசாரணையில் உள்ளனர்.
இந்த நிலையில் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி, உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும், இத்தாலியில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் இரண்டு இராணுவ அதிகாரிகளை வெளியேற்ற இத்தாலிய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரோமை விட்டு வெளியேற வேண்டும்
அவர் தனது எக்ஸ் தளத்தில், அந்த இரண்டு ரஷ்ய அதிகாரிகளும் 3 நாட்களுக்குள் ரோமை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், இத்தாலி மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து கலப்பு உத்திகளை கையாண்டு வருவதாகவும், இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் "தீவிரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடு" என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், குறிப்பிட்ட இரண்டு அதிகாரிகளை இத்தாலி வெளியேற்றியதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |