எகிப்திய 'மம்மி' மீது சி.டி ஸ்கேன் சோதனை!
இத்தாலிய மருத்துவமனையில் எகிப்திய மம்மியின் ரகசியங்களைக் கண்டுபிடிக்க CT ஸ்கேனைப் பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறது.
முதல்முறையாக பண்டைய எகிப்து மம்மி ஒன்று, நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைச் சந்தித்துள்ளது. ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உடலின் குறுக்குவாட்டில் உள்ள பகுதிகளில் ஊடுகதிர்களைச் செலுத்தக் கணினியைப் பயன்படுத்தும் முறை CT ஸ்கேன் (Computed Tomography scan) எனப்படுகிறது. இது உடலின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தி, தகவலைப் பகுப்பாய்வு செய்து, படத்தையும் விவரங்களையும் சிடி ஸ்கேன் சேகரித்து கொடுக்கிறது.
பண்டைய எகிப்திய பாதிரியாரான அங்கேகோன்சுவின் (Ankhekhonsu) பதப்படுத்தப்பட்ட உடல், இத்தாலிய நகரமான பெர்கமோவின் (Bergamo) தொல்பொருள் அருங்காட்சியகத்திலிருந்து மிலானின் (Milan) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
அங்கு, வல்லுநர்கள் இந்த மம்மியை ஆய்வுக்கு உட்படுத்தி, கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கைமுறையையும், அடக்கம் செய்யும் வழக்கங்களையும் ஆராய உள்ளனர்.
அந்த எகிப்தியப் பாதிரியாரின் வாழ்க்கையையும் மரணத்தையும் மறுநிர்மாணம் செய்து, அவரது உடலைப் பதப்படுத்த எந்த வகையான பொருள்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை அறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
நவீன மருத்துவ ஆராய்ச்சிக்கு பண்டைய நோய்களையும் காயங்களையும் ஆராய்வது முக்கியம் என்று கூறப்படுகிறது.