புடின் - டிரம்ப் இடையே டீசல் ஒப்பந்தம்: இத்தாலிய பிரதமர் மெலோனி விடுத்த எச்சரிக்கை
ரஷ்யாவுடனான டீசல் ஒப்பந்தம் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி எச்சரித்துள்ளார்.
டீசல் ஒப்பந்தம் தொடர்பில் இத்தாலிய பிரதமர் எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ள டீசல் விநியோக ஒப்பந்தம் குறித்து இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கவலை தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் செனட் சபையில் உரையாற்றிய மெலோனி, ரஷ்யாவின் டீசலை அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் அமெரிக்க-ரஷ்ய ஒப்பந்தமானது மிகவும் ஆபத்தான முடிவு என சுட்டிக்காட்டினார்.
அத்துடன் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் முன்னெடுத்த அழுத்தங்களை இந்த ஒப்பந்தமானது பலவீனப்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் எதிர் காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தைகளிலும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து ஒரு குரலாக ஒலிக்க வேண்டும் என்றும் மெலோனி வலியுறுத்தியுள்ளார்.
E3 நாடுகளை கேள்வி எழுப்பிய மெலோனி?
பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய E3 நாடுகள் பேச்சுவார்த்தைகளை தன்னிச்சையாக முன்னெடுப்பதாக மெலோனி சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பாவிற்காக நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தினால், அதன் அனைத்து உறுப்பு நாடுகளின் சம்மதத்தையும் பெற்ற பிறகே பேச்சுவார்த்தையை செயல்படுத்த வேண்டும், E3 நாடுகள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.
வெளியுறவு கொள்கைகளுக்கு அப்பால், இத்தாலி சந்தித்து வரும் பொருளாதார சவால்களை சுட்டிக்காட்டி, ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள் இதற்கான ஒருங்கிணைந்த தீர்வை காண வேண்டும் என சுட்டிக்காட்டினார்