இத்தாலியில் கலவரங்களுக்கு எதிராக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிப்பு
Italy government deploys troops and tough laws: இத்தாலியில் விலைவாசி அதிகரிப்பால் ஏற்பட்ட போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில், மிலான் உள்ளிட்ட வடக்கு நகரங்களில் இளைஞர்கள் கடைகள் கொள்ளையடித்து, கண்ணாடிகளை உடைத்து, பொலிஸாருடன் மோதிய சம்பவங்கள் நடந்தன.

அதனைத் தொடர்ந்து, 500 இராணுவ படையினரை மிலானுக்கு அனுப்புதல், புதிய சட்டங்கள், கடுமையான தண்டனைகள் ஆகியவை அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன.
குறிப்பாக, குறைந்தது 5 பேர் குழுவாகக் கலந்து கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் போராட்டங்களில் ஈடுபட்டால், அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 20,000 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முகம் மறைத்தல் அல்லது காயம் ஏற்படுத்துதல் போன்ற சூழ்நிலைகளில் தண்டனைகள் அதிகரிக்கப்படும். சேதப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கான இழப்பீடு உடனடியாக வசூலிக்கப்படும். சிறுவர்கள் ஈடுபட்டால், அவர்களின் பெற்றோர்களே பொறுப்பேற்க வேண்டும்.
பொலிஸாருக்கு, 14 முதல் 17 வயதுக்குட்பட்ட இளைஞர்களை குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், ஆபத்தானவர்களாக கருதினால் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், படையினருக்கு பொலிசிங் அதிகாரம் வழங்கும் யோசனை, ஜனாதிபதி செர்ஜியோ மாட்டரெல்லா எதிர்ப்பு தெரிவித்ததால் நிறைவேற்றப்படவில்லை.
பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, “அழித்தலும் கொள்ளையடிப்பதும் போராட்டம் அல்ல, அது குற்றம். அதற்கு அரசு கடுமையாக பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கலவரங்கள், பிரான்சில் நடந்த வன்முறை போராட்டங்களை ஒத்து இருக்கின்றன. அதேசமயம், தெற்கு இத்தாலியில் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட லொறி சாரதிகள் சாலை மறியலில் ஈடுபட்டு, விநியோக சங்கிலிகளை பாதித்துள்ளனர்.
எரிபொருள் விலை, வாடகை, குறைந்த சம்பளம், பொதுச் சேவைகள் குறைபாடு போன்ற பிரச்சினைகள் மக்கள் வாழ்க்கையை கடுமையாக பாதித்து, அரசுக்கு எதிரான கோபத்தை அதிகரித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |