காதலிப்பதாக ஏமாற்றி பண மோசடி செய்த நபரைத் தேடி இந்தியா வந்த வெளிநாட்டுப்பெண்
Italian woman flies to India after Indian man dupes her with marriage promise: தன்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஏமாற்றி, தன்னிடம் பண மோசடி செய்த ஒருவரைத் தேடி இந்தியாவுக்கே வந்துவிட்டார் வெளிநாட்டுப்பெண்ணொருவர்.
இத்தாலி நாட்டவரான டேனியல்லா (Daniela De Pietri), ஒரு நகை வடிவமைப்பாளர். சில ஊடகங்கள் அவர் பெயரை Paola Bertolini என குறிப்பிட்டுள்ளன.
காதலிப்பதாக ஏமாற்றி பண மோசடி செய்த நபர்
சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக இந்தியாவின் குருகிராமைச் சேர்ந்த ஒருவருடைய நட்பு கிடைத்துள்ளது டேனியல்லாவுக்கு.
நட்பு காதலாக, டேனியல்லா மீது அன்பைப் பொழிந்த அந்த நபர், அவரது நகை வடிவமைப்புத் தொழிலுக்காக வீடியோக்களையும் உருவாக்கிக்கொடுத்துள்ளார்.

அதற்காக அந்த நபர் பணமும் பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறும் டேனியல்லா, வருங்கால மனைவியிடம் பணம் வாங்கமுடியாது என அவர் கூறியதாகவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், ஒரு நாள், தனது வேலை போய்விட்டதாக அந்த நபர் கூறியதாகவும், கொஞ்சம் பணம் கேட்டதாகவும், தான் அவருக்கு 450 யூரோக்கள் அனுப்பியதாகவும் தெரிவிக்கிறார் டேனியல்லா.
மீண்டும் ஒருமுறை அவர் பணம் கேட்க, இவர் மீண்டும் 450 யூரோக்கள் அனுப்பியுள்ளார்.
அதன் பின் அவர் தொடர்ந்து பணம் கேட்க, டேனியல்லாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது என்பது தெரிந்ததும் அந்த நபர் டேனியல்லாவுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார்.
இந்தியா வந்த வெளிநாட்டுப்பெண்
இத்தாலியில் இந்த மோசடி குறித்து டேனியல்லா பொலிசில் புகாரளிக்க, அங்கு, இந்த வழக்கு பணம் தொடர்பான சிக்கலான வழக்கு, அது முடிய நீண்ட நாட்களாகலாம் என பொலிசார் கூற, விமானம் ஏறி இந்தியாவுக்கே வந்துவிட்டார் டேனியல்லா.

அந்த நபர் தான் குருகிராமைச் சேர்ந்தவர் என தன்னிடம் கூறியிருந்ததால், குருகிராம் சைபர் குற்றவியல் பொலிசாரை அணுகிய டேனியல்லா, எழுத்துப்பூர்வமாக அந்த மோசடி நபர் மீது புகாரளித்துள்ளார்.
தான் அந்த நபருக்குக் கொடுத்த பணத்தைவிட இருமடங்கு விமான செலவுக்காக செலவு செய்துவிட்டதாக கூறும் டேனியல்லா, இனி இப்படிப்பட்ட மோசடியாளர்களிடம் மக்கள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே தான் புகாரளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவரை நம்பிய தன்னை ஏமாற்றியதுடன், தனக்கு பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்திய அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார் டேனியல்லா.