15 ஆண்டுக்கு முன்னர் ராஜஸ்தான் அணியால் ஜடேஜாவிற்கு ஐபிஎல் தடை - பின்னணி என்ன?
ஜடேஜா ஒரு ஆண்டு ஐபிஎல் தொடரில் தடை செய்யப்பட்டதன் பின்னனியில் ராஜஸ்தான் அணி இருந்ததை இந்த பதிவில் காணலாம்.
ராஜஸ்தான் செல்லும் ஜடேஜா?
2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், சஞ்சு சாம்சனை விடுவிக்கை CSK அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்பதாக கூறப்படுகிறது.

ரவீந்திர ஜடேஜா 2012 முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இடையே 2 ஆண்டுகள் CSK அணி தடை செய்யப்பட்ட போது, குஜராத் அணிக்காக விளையாடினார்.

2023 ஐபிஎல் தொடரின், இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ஓட்டங்கள் எடுத்து, ஜடேஜா CSK அணியை வெற்றி பெற வைத்ததை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
2010 ஐபிஎல் தடை
ஆனால், ஜடேஜா தனது ஐபிஎல் வாழ்க்கையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தே தொடங்கியுள்ளார். முதல் ஐபிஎல் ஏலத்தில், ஜடேஜாவை ரூ.12 லட்சத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.

2008, 2009 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜாவை அந்த அணியின் அணித்தலைவரும், பயிற்சியாளருமான ஷேன் வார்னே, "சூப்பர் ஸ்டார் உருவாகுகிறார், ராக்ஸ்டார்" என பாராட்டினார்.
2010 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவிக்காமல், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், ஜடேஜா ஐபிஎல் விதிகளை மீறியதாக கூறி ஐபிஎல் நிர்வாக குழுவிடம் புகார் அளித்தது.
இந்த புகாரை ஏற்ற ஐபிஎல் நிர்வாக குழு, ஜடேஜா ஐபிஎல் விதிகளை மீறியதாக கூறி, 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட தடை செய்தது.

2011 ஐபிஎல் தொடரில் கொச்சி டஸ்கர்ஸ் அணி அவரை வாங்கியது.
ஜடேஜாவை கைப்பற்றிய CSK
அந்த அணி அடுத்த தொடரில் தடை செய்யப்பட்டதால், 2012 ஐபிஎல் தொடருக்கு அவரை ஏலத்தில் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

1 லட்சம் டொலர் அடிப்படை விலையுடன் அந்த ஏலத்தில் நுழைந்த ஜடேஜாவை, இரு அணிகளும் போட்டிபோட்டு அதிகபட்ச ஏல உச்சவரம்பு 2 மில்லியன் டொலராக உயர்ந்தது.
இதன் காரணமாக டை பிரேக்கர் விதி அமுல்படுத்தப்பட்டு, இரு அணிகளும் சீல் வைக்கப்பட்ட உறைகளில் ரகசிய ஏலங்களை சமர்ப்பித்தன. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது.

ஆனால் ஜடேஜா கடந்த ஐபிஎல்லில் கலைக்கப்பட்ட கொச்சி டஸ்கர்ஸுடன் அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி 950,000 டொலர் ஊதியம் பெற்றார். சென்னை அணி சமர்ப்பித்த தொகை பிசிசிஐ க்கு சென்றது.

2012 ஐபிஎல் தொடரில், அதிகம் ஊதியம் வாங்கிய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.
2025 ஐபிஎல் தொடரில், ஜடேஜாவிற்கு ரூ.18 கோடிக்கு ஊதியம் வழங்கியது சென்னை அணி.

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஜடேஜாவின் ஒரு வருட தடைக்கு காரணமாக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த தொடரில் அணித்தலைவரை கொடுத்து அவரை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |