அமெரிக்காவிற்கான வாகன ஏற்றுமதியை இடைநிறுத்திய பிரித்தானியாவின் Jaguar Land Rover
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் அதிரடி வரி விதிப்பு காரணமாக அந்த நாட்டிற்கான வாகன ஏற்றுமதியை பிரித்தானியாவின் Jaguar Land Rover நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
முதன்மையான சந்தை
அமெரிக்காவிற்கான வெளிநாட்டு கார் ஏற்றுமதி அனைத்திற்கும் 25 சதவீத வரியை ட்ரம்ப் விதித்துள்ள நிலையில், வியாழக்கிழமை முதல் அமுலுக்கும் வந்துள்ளது. மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீத அடிப்படை வரியும் ட்ரம்பால் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 10 சதவீத வரி விதிப்பானது சனிக்கிழமை பகல் முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ட்ரம்பின் 25 சதவீத வரி விதிப்பு பிரித்தானியாவின் கார் தயாரிப்பு நிறுவனங்களை தடுமாற வைத்துள்ளது.
பிரித்தானியாவின் Jaguar Land Rover ஆடம்பர கார்களுக்கு அமெரிக்கா முதன்மையான சந்தையாகும். இதனையடுத்து வணிக கூட்டாளர்களுடன் புதிய வர்த்தக விதிமுறைகளை நிவர்த்தி செய்ய பணியாற்றி வருவதாகவும்,
ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி இடைநிறுத்தம் உட்பட சில குறுகிய கால நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்றும் Jaguar Land Rover நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் டாடா நிறுவனம்
பிரித்தானியாவின் கார் தொழிற்சாலையில் நேரிடையாக 200,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது இவர்கள் நிலை பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தை அடுத்து பிரித்தானியாவின் கார்களுக்கு அமெரிக்கா மிகப் பெரிய சந்தையாக உருவாகியுள்ளது. எண்ணிக்கை அளவில் Jaguar Land Rover என்பது பிரித்தானியாவின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களாகும்.
மேலும் பல்வேறு மொடல்களில் ஆண்டுக்கு 400,000 கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கால்பகுதி அளவுக்கு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. Jaguar Land Rover என்பது இந்தியாவின் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
செப்டம்பர் வரையிலான 12 மாதங்களில் சுமார் 8.3 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வாகனங்கள் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழலில் மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள ஒரு JLR தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் உள்ளூர்வாசிகள், 9,000 தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |