இந்திய பெற்றோரிடமிருந்து ஜேர்மன் அதிகாரிகளால் பிரிக்கப்பட்ட குழந்தை: குழந்தையை ஒப்படைக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு இந்திய தம்பதியரின் குழந்தை, ஜேர்மன் அதிகாரிகளால் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த குழந்தையை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தை
இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான பவேஷ் ஷாவும் அவரது மனைவியான தாராவும், 2018ஆம் ஆண்டு ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கு குடிபெயர்ந்தார்கள்.
2021ஆம் ஆண்டு, தம்பதியருக்கு அரிஹா ஷா என்னும் பெண் குழந்தை பிறந்தது. பேத்தியைப் பார்ப்பதற்காக அரிஹாவின் பாட்டி இந்தியாவிலிருந்து ஜேர்மனி வந்துள்ளார்.
அப்போது, ஒரு நாள், எதிர்பாராதவிதமாக பாட்டியால் குழந்தைக்கு காயம் ஏற்படவே, குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் குழந்தையைக் கைப்பற்றி, அரசு காப்பகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் ஜேர்மன் அதிகாரிகள்.
அரிஹாவின் பெற்றோர் இந்தியா திரும்பிவிட, சுமார் நான்கு ஆண்டுகளாக, அரிஹா பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் காப்பகம் ஒன்றில் வளர்ந்துவருகிறாள்.
அரிஹாவின் குடும்பத்தினர் மீதான வழக்குகள் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடித்துவைக்கப்பட்ட நிலையிலும், குழந்தை அரிஹா இந்தியாவுக்கு அனுப்பப்படவில்லை.
இந்தியா வற்புறுத்தல்
குழந்தை அரிஹா, தனது மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் சமுதாயச் சூழலில் வளர்வதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி, குழந்தையை திருப்பித் தருமாறு ஜேர்மனியை தொடர்ந்து வற்புறுத்திவருகிறது இந்தியா.
கடந்த ஆண்டு ஜேர்மனி சென்றிருந்த இந்திய பிரதமரான நரேந்திர மோடியும், அப்போதைய ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸிடம் குழந்தை அரிஹா தொடர்பான பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Johann Wadephulஐ சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான J.ஜெய்ஷங்கர், குழந்தை அரிஹா விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளார்.
Johann Wadephulம் ஜெய்ஷங்கரும் ஊடகவியலாளர்களை சந்தித்த நிலையில், தான் குழந்தை அரிஹா விவகாரம் குறித்து ஜேர்மன் அதிகாரிகளிடம் பேசியதாகவும், அவளது கலாச்சார உரிமைகள் உறுதி செய்யப்படுவதும், அவள் இந்தியச் சூழலில் வளர்வதும் அவசியம் என்பதையும் ஜேர்மன் அமைச்சரிடம் தான் வலியுறுத்தியதாகவும் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் தாமதமாகாமல் இந்த பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்று கூறிய ஜெய்ஷங்கர், அது தொடர்பில் சில விடயங்களை தானும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரும் விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |