இனி உலகின் மிகப்பெரிய நகரம் டோக்கியோ இல்லை - முதலிடத்தில் எந்த நகரம்?
மக்கள் தொகை அடிப்படையில், உலகின் மிகப்பெரிய நகரமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ நீண்ட காலமாக இருந்து வந்தது.
முதலிடம் பிடித்த ஜகர்த்தா
தற்போது இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தா, அந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் 2025 அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, சுமார் 40 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகராக இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தா உள்ளது.

வங்கதேச தலைநகர் டக்கா, 40 மில்லியன் மக்கள் தொகையுடன், 2வது இடத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள் டக்கா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் இருந்த ஜப்பான் தலைநகர் டோக்கியோ, 33 மில்லியன் மக்கள் தொகையுடன் 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

முதல் 10 நகரங்களில் 9 நகரங்கள் ஆசியாவில் உள்ளது, ஆசியாவைச் சாராத ஒரே நகரம் எகிப்து தலைநகர் கெய்ரோ ஆகும். 32 மில்லியன் மக்கள் தொகையுடன் 4 வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில், இந்தியாவின் புது தில்லி 30.2 மில்லியன் மக்கள் தொகையுடன் 5வது இடத்திலும், சீனாவின் ஷாங்காய், 29.6 மில்லியன் மக்கள் தொகையுடன் 6 வது இடத்திலும், சீனாவின் குவாங்சோ 27.6 மில்லியன் மக்கள் தொகையுடன் 7வது இடத்திலும் உள்ளது.

மேலும், பிலிப்பைன்ஸின் மணிலா 24.7 மில்லியன் மக்கள் தொகையுடன் 8 வது இடத்திலும், இந்தியாவின் கொல்கத்தா 22.5 மில்லியன்மக்கள் தொகையுடன் 9 வது இடத்திலும், தென் கொரியாவின் சியோல் 22.5 மில்லியன் மக்கள் தொகையுடன் 10 வது இடத்தில் உள்ளது.
புதிய 4 நகரங்கள்
10 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகையை கொண்ட மெகா நகரங்கள் 1975ஆம் ஆண்டில் 8 ஆக இருந்தது. 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
இதில்,19 நகரங்கள் ஆசியாவில் உள்ளது. 2050 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 37 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா, ஐக்கிய தான்சானியா குடியரசுவின் டார் எஸ் சலாம், இந்தியாவின் பீகாரில் உள்ள ஹாஜிபூர் மற்றும் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் ஆகிய நகரங்களின் மக்கள் தொகை 10 மில்லியனைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |