அடையார் ஆனந்த பவனின் பெரும்பான்மை பங்குகளை வாங்கும் பில்லியனரின் மகன் - ரூ.1,710 கோடி முதலீடு
James Murdoch Invests 180 Mn dollars in India's A2B Chain: அடையார் ஆனந்த பவனின் (Adyar Anada Bhavan) பெரும்பான்மை பங்குகளை பிரபல பில்லியனரின் மகன் வாங்கவுள்ளார்.
கைமாறும் அடையார் ஆனந்த பவன்
தமிழ்நாட்டின் பிரபலமான சைவ உணவக நிறுவனமான அடையார் ஆனந்த பவன் (A2B) நிறுவனத்தில் உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்கின் மகன் ஜேம்ஸ் முர்டோக் சுமார் 180 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய உள்ளார்.

இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.1,710 கோடியாகும். இந்த முதலீட்டின் மூலம் A2B நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை ஜேம்ஸ் முர்டோக் தலைமையிலான நிறுவனம் கைப்பற்றுகிறது.
இந்த முதலீடு இந்திய உணவுத் துறையில் முக்கியமான வணிக ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.
யார் இந்த ஜேம்ஸ் முர்டோக்?
ஜேம்ஸ் முர்டோக் (James Murdoch), உலகப் புகழ்பெற்ற ஊடக நிறுவனங்களான News Corp மற்றும் Fox Corp நிறுவனங்களை உருவாக்கிய ரூபர்ட் முர்டோக்கின் இளைய மகன் ஆவார். இவர் இந்திய ஊடகத் துறையில் அனுபவம் பெற்ற உதய் சங்கருடன் இணைந்து Bodhi Tree Systems என்ற முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் 2022-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது இந்தியாவின் உணவு வணிகத் துறையில் தனது முதலீட்டை விரிவுபடுத்தும் நோக்கில் A2B நிறுவனத்தில் முதலீடு செய்கிறது.

50 ஆண்டுகளில் வளர்ந்த A2B நிறுவனம்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அடையார் ஆனந்த பவன் நிறுவனம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய இனிப்புக் கடையாகத் தொடங்கப்பட்டது. பின்னர் இட்லி, தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள், இனிப்புகள், கார வகைகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பெரிய நிறுவனமாக வளர்ந்தது.
தற்போது இந்தியாவில் சுமார் 160 கிளைகளையும், வெளிநாடுகளில் 30-க்கும் மேற்பட்ட கிளைகளையும் A2B கொண்டுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மலேசியா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 15,000 பேர் பணியாற்றுகின்றனர்.
உலகச் சந்தைக்கு விரிவுபடுத்த திட்டம்
இந்த முதலீட்டின் முக்கிய நோக்கம் A2B நிறுவனத்தை சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய உணவு நிறுவனமாக உருவாக்குவதாகும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் புதிய கிளைகளைத் தொடங்குவது, உணவு உற்பத்தி வசதிகளை நவீனப்படுத்துவது, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மேலும், நிறுவனத்தை எதிர்காலத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்குத் தயார்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தின்படி, உதய் சங்கர் A2B நிறுவனத்தின் புதிய இயக்குநர் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். தமிழ்நாட்டில் ஒரு சிறிய இனிப்புக் கடையாகத் தொடங்கிய நிறுவனம், தற்போது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென்னிந்திய உணவுகளுக்கு உலக அளவில் அதிகரித்து வரும் வரவேற்பையும், இந்திய உணவு நிறுவனங்களின் வளர்ச்சி வாய்ப்புகளையும் இந்த முதலீடு எடுத்துக்காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |