ஜனநாயகன் 9 ஆம் திகதி வெளியாவதில் சிக்கல் - என்ன காரணம்?
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், 9 ஆம் திகதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கு
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் திரைப்படத்தை வரும் ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

தவெக தலைவர் விஜய், அரசியலில் நுழைந்ததால் ஜன நாயகன் விஜய்யின் திரை வாழ்க்கையில் கடைசி படமாக அமைந்துள்ளது. இதனால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
அதேவேளையில் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், படத்திற்கான முன்பதிவை கூட தொடங்க முடியாத நிலை உள்ளது.
விரைவாக தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி, ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், படத்தில் எந்தெந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன? என்ற விபரங்களை நீதிபதி கேட்டறிந்தார். படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என நீதிப்பதி கேள்வி எழுப்பினார்.
சென்சார் தரப்பு வாதம்
இதற்கு பதிலளித்த தணிக்கை குழு, “பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும். இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல.

படத்தில், பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.
சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட, தணிக்கை வாரியக் குழு அளித்த பரிந்துரையில் திருப்தி இல்லை எனில் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப தணிக்கை வாரிய தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
மறுதணிக்கை குறித்து டிசம்பர் 5 ஆம் திகதி தயாரிப்பு குழுவிற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. சென்சார் பரிசீலனைக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறுபடியும் பார்க்கப்பட வேண்டும்.
சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்போ அல்லது நிராகரிக்கப்படுவதற்கு முன்போ மனுதாரர் நீதிமன்றத்திற்கு வர முடியாது. நாளை மறுதினம் படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது.
கடந்த மாதம் 18ம் திகதிதான் படக்குழு விண்ணப்பித்துள்ளது. விதிகளின் படியே நாங்கள் முடிவெடுக்க முடியும்" என தெரிவித்தது.
ரிலீஸ் திகதியை உரக்கக் கூறிவிட்டோம்
தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ரூ.500 கோடி இப்படத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஜனவரி 9ம் திகதி ரிலீஸ் என உரக்கக் கூறிவிட்டோம். தட்கல் முறையில் டிசம்பர் 18ம் திகதி விண்ணப்பித்துள்ளோம்.
தணிக்கை வாரியம் ஒரு முறை முடிவு செய்த பிறகு அதன் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது, பெரும்பான்மை முடிவு இல்லாதபோது மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.
பெரும்பான்மை முடிவுக்கு பிறகு வாரியம் பின்வாங்க முடியாது.தணிக்கை அதிகாரிகள் சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளார்கள்.
தேர்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் எழுதிய கடிதத்தை புகார் என்று கூட அழைக்க முடியாது. இன்றே தீர்ப்பு வழங்க வேண்டும்." என வாதம் வைத்துள்ளார்.
முன்பே வெளியீட்டு திகதியை அறிவித்தாலும், தணிக்கை வாரியம் டைம்லைனை பின்பற்றியே ஆக வேண்டும் என கூறிய நீதிபதி, பட வெளியீடு திட்டமிடப்பட்டிருந்த ஜனவரி 9 ஆம் திகதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளதால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 9 ஆம் திகதி என்ன நடக்கும்?
வழக்கமாக காலை 10.30 மணிக்கு தான் நீதிமன்ற விசாரணை தொடங்கும் என்பதால் காலை 9 மணி காட்சிக்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
ஜனவரி 9 ஆம் திகதி எத்தனை மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அதனை பொறுத்துதான் ரிலீஸ் திகதி அமையும்.
ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அன்றே சென்சார் சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை தணிக்கை குழு மேல் முறையீட்டுக்கு சென்றால், மேலும் சில நாட்கள் அல்லது வாரங்கள் படம் ரிலீஸ் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |