ஹார்முஸ் நீரிணையில் களமிறங்கும் ஜப்பான் இராணுவம்: அமைச்சர் சொன்ன விளக்கம்
ஹார்முஸ் நீரிணையில் ஈரான் பதித்துள்ளதாகக் கூறப்படும் கண்ணிவெடிகளை அகற்ற தனது இராணுவத்தை களமிறக்குவது குறித்துப் பரிசீலிக்கும் என ஜப்பான் அறிவித்துள்ளது.
தடையாக அமைந்தால்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பின்னர் இது தொடர்பில் ஆலோசிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தோஷிமிட்சு மோட்டேகி ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.

போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு, கப்பல் போக்குவரத்திற்கு கண்ணிவெடிகள் தடையாக அமைந்தால், அது பரிசீலிக்கத்தக்க ஒரு விடயமாக இருக்கும் என்று தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் போருக்குப் பிந்தைய அமைதிவாத அரசியலமைப்பின் கீழ், அதன் இராணுவ நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன; இருப்பினும், 2015-ஆம் ஆண்டின் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஜப்பானின் நெருங்கிய பாதுகாப்புப் பங்காளிகள் மீதான தாக்குதல் உட்பட,
ஏதேனும் ஒரு தாக்குதல் ஜப்பானின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ள வேறு வழிகள் ஏதும் இல்லாத நிலையில், ஜப்பான் தனது தற்காப்புப் படைகளை வெளிநாடுகளில் பயன்படுத்திக்கொள்ள அச்சட்டம் அனுமதிக்கிறது.
இதனிடையே, ஹார்முஸ் நீரிணை வழியாக, ஜப்பானியக் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிக்கும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள, ஜப்பானிடம் உடனடித் திட்டங்கள் ஏதும் இல்லை என்றும் அமைச்சர் மோட்டேகி தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கக்கூடும்
ஆனால், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், ஜப்பான் தொடர்புடைய கப்பல்களை நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கக்கூடும் என்பது குறித்து, அவர் மொட்டேகியிடம் பேசியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை வழியாகவே ஜப்பான் தனது 90 சதவீத எண்ணெய் இறக்குமதியைப் பெறுகிறது. ஈரான் போர் தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு, ஜப்பான் மற்றும் பிற நாடுகளைத் தங்கள் இருப்புகளிலிருந்து எண்ணெயை வெளியிடத் தூண்டியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஜப்பானின் உதவியை ட்ரம்ப் கோரியிருந்த நிலையில், பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் போன்று ஜப்பானும் உதவ மறுத்திருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை ட்ரம்பை நேரிடையாக சந்தித்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தங்களின் சட்டங்களின்படி, அந்த நீரிணையில் ஜப்பானால் என்னென்ன உதவிகளை வழங்க முடியும், எவற்றை வழங்க முடியாது என்பது குறித்து விளக்கமளித்திருந்ததாக குறிப்பிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |