ஜப்பான் நிலநடுக்கம்... மீட்பு நடவடிக்கை தீவிரம்: மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
தெற்கு ஜப்பானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து மாகாணங்களில்
ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோருக்கு மின்சாரம், தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சனே தகைச்சி புதன்கிழமை தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் கியூஷுவின் தெற்குத் தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தைத் தாக்கியபோது, அந்த நிலநடுக்கம் ஜப்பானிய ஷிண்டோ தீவிர அளவுகோலில் அதிகபட்சமாக 7 ஆகப் பதிவானது.
புதன்கிழமை அதிகாலை நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள பேரிடர் முகாம்களில் 9,000-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறைந்தது 13 பேர் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் நிகழ்ந்த மறுநாளான புதன்கிழமை பகல் 7 மணி நிலவரப்படி, குமாமோட்டோ மற்றும் ஃபுகுவோகா உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் உள்ள 506 பேரிடர் முகாம்களில் 9,186 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும்,
ஏழு பேர் பலத்த காயங்களுடனும் 29 பேர் லேசான காயங்களுடனும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.

நில அதிர்வுகள்
இந்த நிலையில், பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ஜப்பானிய ராணுவம் 3,600 வீரர்களைத் திரட்டியுள்ளதாகவும், வான்வழியாக சேதங்களை மதிப்பிடுவதற்காக 20 விமானங்களை அனுப்பியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை காலைக்குள் 1 முதல் 4 வரையிலான ரிக்டர் அளவுகளில் 60-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் அது விலக்கிக்கொள்ளப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி, சுமார் 50,000 வீடுகளில் மின்சாரமும், 140,000 வீடுகளில் குடிநீரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

அப்பகுதியில் புதன்கிழமையன்று வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில், அதிக ஈரப்பதம் நிலவுவதால், குளிரூட்டப்பட்ட வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாதவர்களுக்கு heatstroke ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |