மாயமான போர் விமானம்., 2 வாரங்களுக்கு பிறகு விமானியின் சடலம் மீட்பு..
இரண்டு வாரங்களுக்கு முன்பு ரேடாரில் இருந்து மாயமான ஜப்பானிய போர் விமானத்தின் இரண்டு விமானிகளில் ஒருவரின் உடலை மீட்டுள்ளதாக ஜப்பான் விமானப்படை தெரிவித்துள்ளது.
ஜப்பானின் F-15 போர் விமானம் ஜனவரி 31 அன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மத்திய இஷிகாவா பிராந்தியத்தில் உள்ள கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து காணாமல் போனது. அதனைத் தொடர்ந்து, காணாமல் போன அதன் பணியாளர்களைத் தேடும் முயற்சியில் ஜப்பானிய இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
ஜப்பான் கடலில் தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினரால் வெள்ளிக்கிழமை ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்தது.
சடலத்தை அடையாளம் கண்ட விமான படையினர், அது விமானியின் உடல் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர், ஆனால் பெயரை வெளியிடவில்லை. மேலும், காணாமல் போன துணை விமானியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர்களின் விமானம் ஏன், எப்படி விபத்துக்குள்ளானது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் இந்த சம்பவத்தை அடுத்து F-15 விமானங்களை தரையிறக்க முயற்சிக்கவில்லை.
ஜப்பானில் எப்போதாவது இதுபோன்று ஒரு விமானப்படை சம்பந்தப்பட்ட விபத்து நடக்கிறது. 2019-ஆம் ஆண்டில் ஒரு F-35A ஸ்டெல்த் ஜெட் விமானம் இடஞ்சார்ந்த திசைதிருப்பலுக்கு ஆளானதால் கடலில் விழுந்து நொறுங்கியது.