கால்பந்தாட்ட போட்டி முடிந்ததும் மைதானத்தில் ஜப்பான் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
ஃபிபா உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஈக்வடார்- கத்தார் அணிகள் மோதிய போட்டி முடிந்த பின்னர், ஜப்பான் ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்தது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஃபிபா உலகக்கோப்பை
ஃபிபா உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர் (FIFA World Cup Qatar 2022) கத்தாரில் நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் 20ம் தேதி தொடங்கிய போட்டிகள் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தம் 34 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டிகளை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளன.
இந்நிலையில் தொடக்க நாளன்று 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள கத்தார் - ஈகுவடார் அணிகள் மோதின.
இந்த போட்டியில் 2-0 என்ற கணக்கில் ஈகுவடார் வெற்றி பெற்றது, இப்போட்டி முடிந்தவுடன் ஜப்பான் ரசிகர்கள் மைதானத்தில் செய்த செயல் வைரலாகி வருகிறது.
மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்
பஹ்ரைனை சேர்ந்த Omar Al-Farooq என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
அதாவது, போட்டி முடிந்ததும் மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஜப்பான் ரசிகர்கள் ஈடுபட்டனர்.
மைதானத்தில் கிடைந்த பிளாஸ்டிக் போத்தல்கள், சாப்பிட்டு விட்டுச்சென்ற உணவுப்பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்றினர்.
ஜப்பானியர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர், அன்றைய நாள் ஜப்பான் விளையாடாதபோதும், ரசிகர்கள் தாமாக முன்வந்து மைதானத்தை சுத்தம் செய்துள்ளனர்.
இதை ஏன் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நாங்கள் ஜப்பானியர்கள், இந்த இடத்தை மதிக்கிறோம், எங்கள் பின்னால் இருக்கும் குப்பைகளை அகற்றுவதே கடமை என பதிலளித்துள்ளார் ரசிகர் ஒருவர்.