உக்ரைனில் ரஷ்ய கண்ணிவெடிகளை அகற்ற களமிறங்கும் ஆசிய நாடு
உக்ரைன் மற்றும் பிற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பொருட்டு கம்போடியாவுடன் இணைந்து தங்கள் நாடு செயல்படும் என்று ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள்
ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் Yoko Kamikawa சனிக்கிழமை Phnom Penh விஜயத்தின் போது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். கம்போடியாவில் சுமார் மூன்று தசாப்தகால சண்டையின் போது மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன.
இந்த சண்டைகள் 1998ல் முடிவுக்கு வந்தன. ஆனால் அந்த கண்ணிவெடிகளில் சிக்கி பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் ஊனமுற்ற நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், கம்போடியா கடந்த 1998ல் இருந்தே ஜப்பானுடன் இணைந்து கண்ணிவெடிகளை அகற்றி வருகிறது. தற்போது உக்ரைனில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத்துடன் கம்போடியாவும் ஜப்பானும் களமிறங்கியுள்ளது.
அடுத்த வாரம் கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகளை உக்ரைனுக்கு ஜப்பான் வழங்க உள்ளது. அத்துடன் ஆகஸ்ட் மாதம் உக்ரேனிய அமைப்புகளுக்கு கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கம்போடியாவில் வைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
13 வகையான கண்ணிவெடிகள்
உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களிடையே கண்ணிவெடிகளால் ஏற்படும் மரணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த 2022ல் ரஷ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைனின் பல பகுதிகளில் கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவலின் அடிப்படையில், உக்ரைனின் 27ல் 11 பிராந்தியங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2022 பிப்ரவரி முதல் ரஷ்ய ராணுவத்தினர் 13 வகையான கண்ணிவெடிகளை உக்ரைனில் புதைத்துள்ளதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கண்ணிவெடிகளால் 1979ல் இருந்து உலகம் முழுவதும் சுமார் 20,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இதில் இருமடங்கு என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |