தைவான் அருகே ஏவுகணைகளை நிலைநிறுத்தும் ஜப்பான்... இறுகும் நெருக்கடி
தைவானுக்கு அருகே தீவு ஒன்றில் ஏவுகணைகளை நிலைநிறுத்தும் ஜப்பானின் திட்டத்தை, பிராந்திய பதற்றத்தை உருவாக்கி இராணுவ மோதலைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சி என்று சீனா சாடியுள்ளது.
இராணுவ எதிர்வினை
ஜப்பான் பிரதமர் தகைச்சியின் கருத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் நாளுக்கு நாள் விரிசலடைந்து வருகிறது.

ஜனநாயக முறையில் நிர்வகிக்கப்படும் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால், ஜப்பானிலிருந்து இராணுவம் எதிர்வினையாற்றக்கூடும் என்று பிரதமர் சானே தகைச்சி தங்களது நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜப்பானில் உள்ள வலதுசாரி சக்திகள், ஜப்பானையும் அந்தப் பிராந்தியத்தையும் பேரழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்று சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கடிந்துகொண்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என சீனாவிற்கு தெரியும் என்றும், அதன் தேசிய பிராந்திய இறையாண்மையைப் பாதுகாப்பது உறுதி என்றும் அதற்கான திறன் சீனாவிடம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் சீனாவின் எதிர்ப்பை ஜப்பான் பொருட்படுத்தப்போவதில்லை என்றும், தங்கள் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதில் மாற்றமில்லை என்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், தைவானின் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 110 கிமீ (68 மைல்) தொலைவில் உள்ள யோனகுனி தீவில் அமைந்துள்ள இராணுவ தளத்தில் தரையிலிருந்து வான் நோக்கி ஏவக்கூடிய ஏவுகணை பிரிவு நிலைநிறுத்தப்படுகிறது.
இந்த நகர்வு மிகவும் ஆபத்தானது மற்றும் அருகிலுள்ள நாடுகள், சர்வதேச சமூகத்தினரிடையே கடுமையான கவலைகள் எழக் கூடும் என்றும் மாவோ நிங் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பை உறுதி செய்ய
தைவானுக்கு ஆதரவாக இராணுவ எதிர்வினை குறித்த பிரதமர் தகைச்சியின் கருத்தை அடுத்து சீனா உடனடியாக பயணக் கட்டுப்பாடுகள் விதித்ததுடன், ஜப்பானின் கடல் உணவுகளுக்கு தடை விதித்தது.
ஜப்பான் திரைப்படங்களை சீனாவில் திரையிட மறுத்ததுடன், சீன மக்கள் ஜப்பானுக்கு பயணப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. தைவானை சொந்தம் கொண்டாடும் சீனா, இராணுவ பலத்தைப் பயன்படுத்தியும் தங்களுடன் இணைக்கத் தயாராக இருப்பதாக கூறி வருகிறது.

ஆனால், சீனாவுடன் இணைய வேண்டுமா என்பதை தைவான் மக்களே முடிவு செய்வார்கள் என அங்குள்ள நிர்வாகம் பதிலளித்துள்ளது. இதனிடையே, ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, ஜப்பான் தனது பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உரிமை உண்டு என்று தைவான் துணை வெளிவிவகார அமைச்சர் பிராங்கோயிஸ் வூ தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
மேலும், ஜப்பான் அதன் இராணுவத்தை வலுப்படுத்துவது அடிப்படையில் தைவான் ஜலசந்தியில் பாதுகாப்பைப் பேணுவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |