பெட்ரோல் வாகனங்களை தடைசெய்யவுள்ள ஜப்பான்; இனி முழுவதுமாக ஹைபிரிட் எலக்ட்ரிக் கார்கள் தான்!
ஜப்பான் அடுத்த 15 ஆண்டுகளில் பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களை முற்றிலுமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜப்பான் அரசாங்கம் 2050-ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைந்து, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர் பசுமை வளர்ச்சியை உருவாக்கும் திட்டத்தில் இரு ப்பதாக கூறியுள்ளது.
ஹைட்ரஜன் மற்றும் வாகனத் தொழில்களை குறிவைத்துள்ள இந்த “பசுமை வளர்ச்சி திட்டம்” (green growth strategy), இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிகர அடிப்படையில் கார்பன் உமிழ்வை அகற்றவதற்கான, பிரதமர் யோஷிஹைட் சுகாவின் அக்டோபர் உறுதிமொழியை அடைவதற்கான செயல் திட்டமாகும்.
கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவுவதற்கும், ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் பிற பொருளாதார நாடுகளைத் தொடர்ந்து லட்சிய உமிழ்வு இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் பிரதமர் சுகா பசுமை முதலீட்டிற்கு முன்னுரிமை அளித்துள்ளார்.
பசுமை முதலீட்டின் மூலம் கூடுதல் பொருளாதார வளர்ச்சியை (2030-ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு 870 பில்லியன் டாலர் இலக்கையும், 2050-ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு 1.8 டிரில்லியன் டாலர் இலக்கையும்) குறிவைக்கும் நிறுவனங்களுக்கு, வரி சலுகைகள் மற்றும் பிற நிதி உதவிகளை அரசாங்கம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை தொழில்நுட்பத்தில் பெருநிறுவன முதலீட்டை ஆதரிக்க 2 டிரில்லியன் யென் மதிப்பிலான பசுமை நிதி வழங்கப்படவுள்ளது.
2030-களின் நடுப்பகுதியில் ஹைபிரிட் மற்றும் எரிபொருள் செல் வாகனங்கள் உள்ளிட்ட மின்சார வாகனங்கலைக் கொண்டு, பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களை மாற்றியமைக்க இந்த திட்டம் முயல்கிறது.
மின்சார வாகனங்களின் பரவலை விரைவுபடுத்துவதற்காக, 2030-ஆம் ஆண்டளவில் வாகன பேட்டரிகளின் விலையை குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இது மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில், ஹைட்ரஜன் நுகர்வை 2030-ஆம் ஆண்டில் 3 மில்லியன் டன்னாகவும், 2050 வாக்கில் 20 மில்லியன் டன்னாகவும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டம் கடல் காற்று மற்றும் அம்மோனியா எரிபொருள் போன்ற 14 தொழில்களை முன்வைத்து, 2040-க்குள் 45 ஜிகாவாட் கடல் காற்று சக்தியை நிறுவுவதை இலக்காகக் கொண்டுள்ளது.