தூக்கம் குறித்து ஜப்பான் பிரதமர் தெரிவித்த கருத்து: ராஜினாமா செய்ய கோரிக்கை
ஜப்பான் பிரதமரான சனே தகைச்சி, தான் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குவதாக தெரிவித்த விடயம், ஜப்பான் அரசியலில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தூக்கம் குறித்து ஜப்பான் பிரதமர் தெரிவித்த கருத்து
திங்கட்கிழமை ஜப்பானில் கடல் தினம் என்னும் விடுமுறை தினம் ஆனதால், மக்கள் கடற்கரைகளை நோக்கி படையெடுத்தார்கள்.

இந்நிலையில், அன்றுதான், தான் முதன்முறையாக ஐந்து மணி நேரம் தூங்கியதாகவும், மற்ற நாட்களில் தனக்கு பூஜ்ஜியம் முதல் மூன்று மணி நேரம் வரை மட்டுமே ஓய்வு கிடைக்கும் என்றும் ஜப்பான் பிரதமரான சனே தகைச்சி சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட இடுகை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அலுவலக வேலை, வீட்டு வேலை என தான் வார இறுதியை தான் செலவிட்டதாகவும் அவர் குறிப்பிட, அவரது இடுகை உடனடியாக வைரலானது. அது 31 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
இதற்கிடையில், உடனடியாக அவரது கருத்து தொடர்பில் சர்ச்சையும் எழுந்துள்ளது.
ஆம், எதிர்க்கட்சியினர், பிரதமர் தகைச்சி போதுமான நேரம் தூங்கவில்லை என்றால், அவரால் சரியான முடிவுகளை எடுக்கமுடியாது, அரசின் உயர் பொறுப்பிலிருக்கும் அவரால் சரியான முடிவுகளை எடுக்கமுடியவில்லை என்றால், அதனால் நாட்டின் நெருக்கடி மேலாண்மைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.
தகைச்சி நிர்வாகம் செய்யும் முறையை விமர்சித்த மற்றொரு எதிர்க்கட்சி அரசியல்வாதி, அவர் உடனே ராஜினாமா செய்யவேண்டும் என கோரியுள்ளார்.
இந்நிலையில், அரசியல் கூட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் தகைச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
முந்தைய பிரதமர்கள் தங்கள் வீட்டிலுள்ள பொறுப்புகளுக்காக தங்கள் மனைவியை நம்பியிருந்தார்கள்.
ஆனால், தகைச்சியோ, அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலையையும் கவனித்துக்கொள்கிறார் என்று கூறியுள்ளார் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஒருவர்.
அதேபோல, ஜப்பானின் துணை வெளியுறவு அமைச்சரான அயானோ குனிமிட்சு என்னும் பெண்ணும், உண்மைதான், பல அரசியல்வாதிகளுக்கு இதேபோல இரட்டை பொறுப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த செய்தி, ஜப்பானில் மக்கள் வெகுநேரம் வேலை செய்யும் கலாச்சாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், பல மணி நேரம் கூடுதல் வேலை பார்த்த பணியாளர் ஒருவர், வேலைப் பழு தாங்க இயலாமல் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
இன்னொரு விடயம், கடந்த நவம்பரில் பிரதமர் தகைச்சி அதிகாலை 3.00 மணிக்கு வேலை செய்துகொண்டிருந்தபோது, தன் உதவியாளர் ஒருவரை உதவிக்கு அழைக்க, அப்போதும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |