உலக பொருளாதார தரவரிசையில் ஜப்பான் 6-வது இடத்திற்கு சரிவு
Japan to Slip to 6th in Global GDP Rankings by 2027: உலக பொருளாதார தரவரிசையில் ஜப்பான் 6-வது இடத்திற்கு சரிகிறது.
ஜப்பான் பொருளாதாரம் 6-வது இடத்திற்கு சரிவு
சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட புதிய கணிப்பின் படி, 2027-ஆம் ஆண்டில் ஜப்பானின் பொருளாதாரம் உலக தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரியவுள்ளது.
இதுவரை அமெரிக்கா, சீனா, ஜேர்மனி ஆகியவற்றின் பின்னால் 4-வது இடத்தில் இருந்த ஜப்பான், இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளால் முந்தப்பட உள்ளது.

IMF-ன் World Economic Outlook அறிக்கையில், ஜப்பானின் 2026-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.34 டிரில்லியன் டொலர் என்றும், 2027-இல் 4.46 டிரில்லியன் டொலர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவின் GDP 4.52 டிரில்லியன் டொலராக உயர்ந்து 4-வது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பிரித்தானியாவின் GDP 4.48 டிரில்லியன் டொலராக உயர்ந்து ஜப்பானை முந்தும் என IMF தெரிவித்துள்ளது.
ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2026 மற்றும் 2027-இல் 0.7 சதவீதம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தியா 7 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை எட்டும் என IMF குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தேவைகள் மற்றும் சேவைத் துறையின் வலிமையான வளர்ச்சி இதற்கு காரணமாகும்.
ஜப்பான் ஒருகாலத்தில் உலகின் 2-வது பெரிய பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால், 2010-இல் சீனாவால் முந்தப்பட்டு 3-வது இடத்துக்கு சரிந்தது. 2023-இல் ஜேர்மனி ஜப்பானை முந்தியதால் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இப்போது, 2027-இல் இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகியவற்றால் முந்தப்பட்டு 6-வது இடத்துக்கு சரியவுள்ளது.
இந்த சரிவு, யென் மதிப்பு குறைவு மற்றும் ஜப்பானின் மந்தமான பொருளாதார வளர்ச்சியால் ஏற்பட்டதாக IMF விளக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |