கொடூர வெப்பத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடொன்று: பல நகரங்களில் வெப்பநிலை உச்சம்
ஜப்பானிய நகரங்கள் பல 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் மேலான வெப்பத்தைப் பதிவு செய்துள்ளதால், கொடுமையான வெப்ப நாட்கள் என அதிகாரிகளால் குறிப்பிடப்படுகிறது.
கொடுமையான வெப்பம்
புதன்கிழமையன்று நிலவிய கடும் வெப்பத்தை அவசரக்கால அதிகாரிகள் ஒரு பேரிடர் என்றே குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, நாடு முழுவதும் வெப்பவாதம் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன;

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெப்பம் தொடர்பான காரணங்களால் குறைந்தது 14 பேர் மரணமடைந்துள்ளதாக அவசரக்காலப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமையன்று மூன்று முக்கிய நகரங்களில் வெப்பநிலை கொடுமையான வெப்பம் கொண்ட நாள் என்று பொருள்படும் கொகுஷோபி (kokushobi) என்ற புதிய உச்ச வரம்பைத் தாண்டியதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகோயாவின் மையப்பகுதி மற்றும் கிழக்கே டோக்கியோவுக்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட பெரும் பகுதிகளில், புதன்கிழமையன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கின அல்லது அதைத் தாண்டியுள்ளன.
இதனிடையே, ஜப்பானின் 47 மாகாணங்களில் 41-ல் வெப்பவாதம் (heatstroke) குறித்த எச்சரிக்கைகளை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) விடுத்துள்ளது; மேலும், பொதுமக்கள் - குறிப்பாக முதியவர்கள் - உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.
தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமையின் தகவலின்படி, கடந்த வாரத்தில் ஜப்பானில் சுமார் 11,000 பேர் அவசர மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சுமார் 1,300 பேர்கள்
அவர்களில் 14 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோதே மரணமடைந்திருந்ததாகத் தெரிவித்த அந்த அமைப்பு, கடும் வெப்பநிலையை மக்கள் ஒரு பேரிடர் என்றே கருத வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதனிடையே, பள்ளிகளின் உடற்பயிற்சிக் கூடங்களில் குளிர்சாதன வசதிகளை அமைத்தல் மற்றும் பணிபுரியும் இடங்களில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வணிக நிறுவனங்களை வலியுறுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க ஜப்பான் அரசாங்கம் முயற்சித்து வருவதாக அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜப்பானில் ஆண்டுதோறும் சுமார் 1,300 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் உயிரிழக்கின்றனர் என்றும், 2030-ஆம் ஆண்டிற்குள் அந்த எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அனைத்து குடிமக்களும் தங்கள் பகுதிகளில் உள்ள வெப்பவாதம் (heatstroke) குறித்த எச்சரிக்கைகளின் நிலையைச் சரிபார்க்குமாறும், குளிர்ச்சியான சூழலில் இருக்க ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பிற குளிர்விக்கும் சாதனங்களைச் சரியாகப் பயன்படுத்துமாறும், அடிக்கடி தண்ணீர் அருந்தி சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |