ஜப்பான் பொருளாதாரத்தில் இடியை இறக்கும் சீனா... மொத்தமாக நிறுத்த முடிவு
ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் தடை செய்வதாக சீனா ஜப்பானிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் நெருக்கடி
தைவான் விவகாரத்தில் ஆசியாவின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் மோதலில் இது சமீபத்திய தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.

தைவானை சீனா தாக்கும் என்றால், தங்களின் பாதுகாப்புக்கு என ஜப்பான் இராணுவத்தைக் களமிறக்க நேரிடும் என ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பிரதமர் தகைச்சியின் கருத்திற்கு கோபத்துடன் பதிலளித்த சீனா, ஜப்பானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அதன் குடிமக்களை வலியுறுத்தியது. சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் ஜப்பான் இதனால் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த நிலையில், இறக்குமதி தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், தற்போதைய சூழ்நிலையில், ஜப்பானிய கடல் உணவுகள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அதற்கு ஆதரவு கிடைக்காது என்றார்.
பிரதமர் தகைச்சி தனது கருத்துக்களைத் திரும்பப் பெறவில்லை என்றால், சீனா கடுமையான மற்றும் உறுதியான எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், கடல் உணவு மீதான தடை குறித்து சீன அரசாங்கத்திடமிருந்து தங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்று ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள்
முன்னதாக ஜப்பானின் 47 மாகாணங்களில் 10 மாகாணங்களைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும் ஜப்பானிய கடல் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய்ய இருப்பதாக சீனா ஜூன் மாதம் கூறியிருந்தது.
மட்டுமின்றி, சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக மீண்டும் பதிவு செய்ய கிட்டத்தட்ட 700 ஜப்பானிய ஏற்றுமதியாளர்கள் விண்ணப்பித்திருந்ததாக ஜப்பானிய வேளாண் அமைச்சர் நோரிகாசு சுசுகி செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் வெறும் மூவருக்கு மட்டுமே இதுவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2023 தடைக்கு முன்பு, சீனா ஜப்பானின் முதன்மையான ஸ்காலப் வாங்குபவராகவும், கடல் வெள்ளரிகளின் முக்கிய இறக்குமதியாளராகவும் இருந்தது.
2023ல் ஜப்பான் தனது புகுஷிமா மின் உற்பத்தி நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்ற முடிவு செய்ததால் விதிக்கப்பட்ட ஜப்பானிய கடல் உணவுகள் மீதான கட்டுப்பாடுகளை சீனா சில மாதங்களுக்கு முன்பு மட்டுமே ஓரளவு தளர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |