உக்ரைனுக்கு உதவ டிரோன்களை வழங்கும் ஜப்பான்!
உக்ரைனுக்கு பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்களுடன் டிரோன்களை அனுப்ப உள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
இரண்டு மாத காலமாக உக்ரைன் மீது ரஷ்யா போர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவிக்க, கடந்த மாதம் ஜப்பான் குண்டு துளைக்காத உள்ளாடைகள், தலைகவசங்கள், வெப்ப ஆடைகள், கூடாரங்கள், சுகாதார பொருட்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவற்றை உக்ரைனுக்கு வழங்கியது.
இந்நிலையில் டிரோன்கள், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றையும், ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சிறப்பு உடைகளை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜப்பானின் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட பதிவில், 'உக்ரைன் அரசுக்கு என்.பி.சி. உடைகள் (அணு, உயிரி, ரசாயன ஆயுத தாக்குதலுக்கு எதிரானவை), முகக்கவசங்கள், டிரோன்களை வழங்க ஜப்பான் ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரைனியர்களின் போராட்டம் தொடர்கிறது. இதனால் ஜப்பான் ராணுவ அமைச்சகம், உக்ரைன் நாட்டுக்கு தனது அதிகபட்ச ஆதரவைத் தொடரும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் ஜப்பான் விரைவாக இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.