பிரான்சில் அணுமின் நிலையத்தை சூழ்ந்த ஜெல்லி மீன்கள்! நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி
ஜெல்லி மீன்களால் ஏற்பட்ட எதிர்பாராத அடைப்பின் காரணமாக பிரான்சில் அணுமின் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்காலிகமாக மூடப்பட்ட அணுமின் நிலையம்
வடக்கு பிரான்சில் அமைந்துள்ள கிராவ்லைன்ஸ் அணுமின் நிலையத்தின் குளிரூட்டும் அறையில் ஜெல்லி மீன்களால் ஏற்பட்ட எதிர்பாராத அடைப்பின் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குளிரூட்டும் அறையில் ஏற்பட்ட இந்த அடைப்பு காரணமாக கிராவ்லைன்ஸ் அணுமின் நிலையத்தின் நான்கு அலகுகள் தானாகவே தங்களது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பராமரிப்பு பணிகளுக்காக இரண்டு அலகுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்த அணுமின் நிலையமும் மூடப்பட்டுள்ளது என எரிசக்தி நிறுவனமான EDF தெரிவித்துள்ளது.
இந்த திடீர் பாதிப்பால், ஊழியர்களுக்கோ, அணுமின் நிலையத்திற்கோ அல்லது சுற்றுச்சுழலுக்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் EDF தெரிவித்துள்ளது.
விசாரணை
அணுசக்தி நிலையத்தின் தளத்திற்கு வெளியே மட்டுமே ஜெல்லி மீன்கள் இருப்பதாகவும், ஆனால் தற்போது சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகவும், நிலைய ஊழியர்கள் குளிரூட்டிகளின் வடிகட்டிகளை சுத்தம் செய்து மின் உற்பத்தியை தொடங்குவதற்கான வேலையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் மின் தேவையில் 70%-ஐ அணுமின் சக்தி பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |