ஐரோப்பிய நாடொன்றின் பிரதமராகும் தன்பாலின அரசியல்வாதி
நெதர்லாந்தின் D66 கட்சியின் தலைவர் Rob Jetten வரலாறு படைக்கத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்பாலின பிரதமராக
அக்டோபர் 29ல் நடந்த தேர்தலில் D66 கட்சி பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், 38 வயதேயான Rob Jetten பிரதமராகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

அவர் நாட்டின் இளம் வயது மற்றும் முதல் வெளிப்படையான தன்பாலின பிரதமராக இருப்பார் என்றே கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் நாங்கள் தனிப்பெரும் கட்சியாக மாறியதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ராப் ஜெட்டன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் D66 கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ள அதே நேரத்தில், அது ஒரு பெரிய பொறுப்பாகவும் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கடும் போட்டி நிலவிய தேர்தலில் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதியான Geert Wilders-ஐ எதிர்கொண்டு வெற்றி பெற்றதாக ஜெட்டன் தெரிவித்துள்ளார்.
Geert Wilders தரப்பு புலபெயர் கொள்கைகள் தொடர்பில் பரப்புரை மேற்கொண்டதுடன் குர்ஆனை தடை செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.
இறுதி முடிவு நவம்பர் 3ம் திகதி அறிவிக்கவிருக்கும் நிலையில், ஜெட்டன் தரப்பு ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

நேர்மறையான கருத்துக்களால்
வெறும் இரண்டு வருடங்களுக்குள், ஜெட்டன் தனது கட்சியை நெதர்லாந்து அரசியலில் ஐந்தாவது இடத்திலிருந்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் Yes, we can முழக்கத்தை தங்களது பரப்புரையில் பயன்படுத்திய ஜெட்டன், தனது நேர்மறையான கருத்துக்களால் மக்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தினார்.

நெதர்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள உடென் என்ற நகரத்தில் பிறந்து வளர்ந்த ஜெட்டன், Nijmegen இல் உள்ள Radboud பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் படித்தார்.
தன்பாலின ஈர்ப்பாளரான ஜெட்டன் அர்ஜென்டினா ஹொக்கி வீரர் நிக்கோலஸ் கீனனை அடுத்த ஆண்டு ஸ்பெயினில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |