அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள்
உலகெங்கிலும் உள்ள முதன்மையான யூத பிரபலங்கள் இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மற்றும் உலக நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொறுப்புக்கூற வேண்டும்
காஸாவில் இனப்படுகொலைக்கு சமமான மனசாட்சியற்ற செயல்களில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் இஸ்ரேலிய அதிகாரிகள், ஆஸ்கார் விருது வென்றவர்கள், எழுத்தாளர்கள், மற்றும் அறிவுஜீவிகள் என 450க்கும் மேற்பட்டவர்கள் அதிரவைக்கும் கோரிக்கையுடன் களமிறங்கியுள்ளனர்.
காஸா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலின் கொடூர நடத்தைக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தடை விதிக்கும் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் கிடப்பில் போட திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ள நிலையிலேயே, 450க்கும் மேற்பட்ட யூத பிரபலங்களின் திறந்த மடல் வெளியாகியுள்ளது.
மனித உயிர்களைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட பல சட்டங்கள், சாசனங்கள் மற்றும் மரபுகள் ஹோலோகாஸ்டுக்கு பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டன என்பதை நாங்கள் மறந்துவிடவில்லை என குறிப்பிட்டுள்ள அந்த பிரபலங்கள், அந்தப் பாதுகாப்புகள் இஸ்ரேலால் இடைவிடாமல் மீறப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கான சட்ட வரையறையை பூர்த்தி செய்ததாக மதிப்பிடப்படும் என்பதற்கான சான்றுகள் குவிந்து வருவதால், அளவிட முடியாத துயரத்தில் நாங்கள் தலை குனிகிறோம் என்றும் அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முற்றுப்புள்ளி வைக்கும் வரை
ஒரு உயிரை அழிப்பது என்பது ஒரு முழு உலகத்தையும் அழிப்பதாகும் என்று நமது முன்னோர்கள் கற்பித்தபோது, அவர்கள் ஒருபோதும் பாலஸ்தீனிய மக்களுக்கு விதிவிலக்கு அளிக்கவில்லை. இந்தப் போர் நிறுத்தம் ஆக்கிரமிப்பு மற்றும் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, காஸாவில் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்ததாக 61 சதவீத அமெரிக்க யூதர்கள் நம்புவதாக வாஷிங்டன் போஸ்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும் 39 சதவீதம் பேர்கள் இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலையைச் செய்வதாகக் கூறுகிறார்கள்.
ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்காக எழுதப்பட்ட அந்த கடிதத்தில் இஸ்ரேலிய நெசெட் முன்னாள் சபாநாயகர் அவ்ரஹாம் பர்க், முன்னாள் இஸ்ரேலிய அமைதி பேச்சுவார்த்தையாளர் டேனியல் லெவி, பிரித்தாகிய எழுத்தாளர் மைக்கேல் ரோசன், கனடிய எழுத்தாளர் நவோமி க்ளீன்,
ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஜோனாதன் கிளேசர், அமெரிக்க நடிகர் வாலஸ் ஷான், எம்மி வெற்றியாளர்கள் இலானா கிளேசர் மற்றும் ஹன்னா ஐன்பிண்டர் மற்றும் புலிட்சர் பரிசு வென்ற பெஞ்சமின் மோசர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இன ரீதியாக சுத்திகரிப்பு
காஸாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2023 அக்டோபர் 7 முதல், குறைந்தது 65,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 167,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, சுமார் 90 சதவீதம் காஸா மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே, இரண்டு அமெரிக்க ஜனநாயக செனட்டர்கள், கிறிஸ் வான் ஹோலன் மற்றும் ஜெஃப் மெர்க்லி ஆகியோர் முன்னெடுத்த உண்மை கண்டறியும் ஆய்வுகளில்,
காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழித்து இன ரீதியாக சுத்திகரிப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கை அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் இஸ்ரேல் முன்னெடுத்ததாக உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |