அதிகாலையிலேயே நெஞ்சை உலுக்கிய ரயில் விபத்து.., முடிவே இல்லையா என ஆவேசம்
ஜார்கண்டில் தடம் புரண்ட சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ரயில் விபத்து
இந்திய மாநிலமான ஜார்கண்ட், சக்ராதர்பூர் அருகே சரக்கு ரயில் ஒன்று அதிகாலையிலேயே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரயிலின் இரு பெட்டிகள் கவிழ்ந்தன.
அப்போது, அந்த வழியாக மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதியது. இதனால், விரைவு ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த சம்பவத்தை அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து ரயில் பெட்டியில் இருந்த பயணிகளை மீட்டனர்.
இதில், ரயிலின் B4 பெட்டியில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக சக்ராதர்பூர் மற்றும் மும்பை ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மம்தா குற்றச்சாட்டு
இந்த ரயில் விபத்து தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் இதுகுறித்து தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ரயில் விபத்து தொடர்பான அரசின் அலட்சியப்போக்கிற்கு முடிவே இல்லையா? இது தான் ஆட்சி நடத்தும் முறையா?
வாரா வாரம் நிகழும் ரயில் விபத்துகளை எத்தனை காலங்களுக்கு சகித்துக் கொள்ள முடியும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |