நீண்ட 21 மாதங்கள்... சீனாவை விட்டு வெளியே செல்லாத ஜி ஜின்பிங்: வெளியான காரணம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட உலகத் தலைவர்களில் பெரும்பாலானோர் இத்தாலியில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் நிலையில் சீன ஜனாதிபதி மட்டும் அந்த மாநாட்டில் பங்கேற்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் நடக்கும் உச்சி மாநாட்டிலும், அடுத்த வாரம் ஸ்கொட்லாந்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் காலநிலை தொடர்பான கூட்டத்திலும் சீனத்து ஜனாதிபதி பங்கேற்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை ஜி ஜின்பிங் நேரில் சந்திக்கும் எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றே சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து திரும்பியுள்ளதுடன், தற்போது இத்தாலிக்கு சென்றுள்ளார்.
இதேப்போன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியதுடன், தற்போது ஸ்கொட்லாந்தில் முன்னெடுக்கவிருக்கும் காலநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு சென்றுள்ளார்.
ஆனால், சீனாவை விட்டு ஜி ஜின்பிங் வெளியே செல்லாத காரணம் உண்மையில் கொரோனா பரவல் அச்சம் என்றே கூறப்படுகிறது. அதிகாரிகள் தரப்பில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், இதுவே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
சீனாவின் இந்த மறைமுக புறக்கணிப்பு என்பது அமெரிக்காவுக்கு எதிரான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. சில மாதாங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சீனா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்ததும் அமெரிக்காவை மறைமுகமாக புறக்கணிக்கும் ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், இத்தாலி மற்றும் ஸ்கொட்லாந்தில் சீன ஜனாதிபதியை சந்திக்கும் எண்ணத்தை அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படுத்தியும் வந்துள்ளார். தற்போது அது முடியாமல் போகவே, இரு தலைவர்களும் இணையத்தினூடாக இந்த ஆண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முடிவுக்கும் இதுவரை திகதி அறிவிக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
தற்போதைய சூழலில் ஜி ஜின்பிங் சீனாவை விட்டு வெளியே சென்று திரும்பினால், கொரோனா தொடர்பில் பொதுவாக அமுலில் இருக்கும் விதிகளையே பின்பற்ற வேண்டும்.
அப்படியான ஒரு சூழலை ஜின்பிங் எதிர்கொள்ள வேண்டாம் என அவர் முடிவு செய்திருக்கலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.