பனியில் உறைந்து பலியாகும் மக்கள்... மில்லியன் கணக்கானவர்கள் தவிப்பு: பேரிடர் மாகாணமாக அறிவித்த ஜோ பைடன்
கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவால் மொத்தமாக ஸ்தம்பித்துப் போயுள்ள டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வருகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி டெக்சாஸ் மாகாணத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
சுமார் 4 மில்லியன் மக்கள் மின் துண்டிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக டெக்சாஸ் மாகாண நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது..
மேலும் உறைபனி காரணமாக குடிநீர் வழங்கல் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினைகளில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பகல், டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.
இதன் மூலம் அந்த மாகாணத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் டெக்சாஸ் மாகாணத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில், டெக்சாஸ் மாகாணத்தில் மட்டும் கடும் பனிப்பொழிவுக்கு 30 பேர் பலியானதாகவும், அமெரிக்கா முழுவதுமாக மொத்தம் 58 பேர் பலினாதாக தெரிய வந்துள்ளது.


