நாங்கள் வடகொரியாவுக்கு தடுப்பூசிகள் வழங்கினோம், ஆனால்.. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியாவுக்கு அமெரிக்கா தடுப்பூசிகளை வழங்கிய நிலையில், தங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவில் இம்மாத தொடக்கத்தில் முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை கொரோனா பாதிப்புக்கு அங்கு 66 பேர் இறந்துள்ளதாகவும், 2.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்றுநோய் எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆசியாவுக்கு முதல் முறையாக சுற்றுப்பயணம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வடகொரியாவின் பியோங்யாங் நகரத்திற்கு கோவிட் -19 தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியதாகவும், ஆனால் வடகொரியாவிடம் இருந்து தங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், நாங்கள் வட கொரியாவுக்கு மட்டுமல்ல, சீனாவிற்கும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம், உடனடியாக அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் சியோலில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
Photo Credit: Julie Bennett/Getty Images/AFP
இதற்கிடையில், உலகின் மிக மோசமான சுகாதார அமைப்புகளில் ஒன்றை வடகொரியா கொண்டுள்ளதால், அங்கு ஒரு பெரிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேபோல் வடகொரியாவின் குறைந்த மருத்துவமனைகள் மட்டுமே உள்ளதாகவும் , சில தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் கோவிட் சிகிச்சை மருந்துகள் அல்லது வெகுசன பரிசோதனை திறன் அங்கு இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.